நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா, கேட்ச் பிடித்தபோது எதிர்பாராதவிதமாக பந்து அவரது நெற்றியில் பட்டதால் காயமடைந்தார். rachin ravindra blow forehead
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (பிப்ரவரி 8) தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்திருந்தனர்.
331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 38-ஆவது ஓவரை நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் வீசினார். அந்த ஓவரின் 3-ஆவது பந்தை பாகிஸ்தான் வீரர் குஷ்டில் ஷா எல்லைக்கோட்டை நோக்கி அடித்தார்.

அப்போது ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா அந்த பந்தை கேட்ச் பிடிக்க முயற்சித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக ரச்சின் ரவீந்திரா நெற்றியில் பந்து விழுந்து காயத்தை ஏற்படுத்தியதால், அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது.
உடனடியாக அருகில் இருந்த பாகிஸ்தான் மெடிக்கல் டீம் மற்றும் நியூசிலாந்து மெடிக்கல் டீம் ரச்சின் ரவீந்திராவை மைதானத்தில் இருந்து அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, ரச்சின் ரவீந்திராவை ஊக்கப்படுத்தினர்.
ரச்சின் ரவீந்திராவுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாகவும், சிறிது நாட்கள் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டியில் 47.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
rachin ravindra blow forehead