நடப்பாண்டில் நடைபெற இருக்கும் கத்தார் உலகக்கோப்பை தான் அர்ஜெண்டினாவுக்காக தான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
உலகம் பெரும் எதிர்ப்பார்ப்பில் ஆவலுடன் காண காத்திருக்கும் கால்பந்து உலக கோப்பை அடுத்த மாதம் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இதனையடுத்து எல்லோரது பார்வையும் கத்தார் நோக்கி குவிந்திருக்கிறது
இந்நிலையில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரரான மெஸ்ஸி கத்தார் உலகக் கோப்பை தான் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நிச்சயம் கடைசி உலகக் கோப்பை!
நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், “நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலகக் கோப்பை. இந்த முடிவை எடுத்துவிட்டேன். உலகக் கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
அர்ஜென்டினா மக்கள் மீதான எனது அன்பு நிபந்தனையற்றது. என்னிடம் உள்ள திறமை அனைத்தையும் அவர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருவதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம்!
தொடர்ந்து, தனது கடைசி உலகக்கோப்பையில் பங்கேற்க அவர் அர்ஜெண்டினா அணி குறித்தும் விவரித்தார்.
”உண்மை என்னவென்றால், ஒரு சிறிய பதற்றம் உள்ளது. என்ன நடக்கப் போகிறது? இந்த உலகக்கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது? என்ற பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன்
உலகக் கோப்பைக்காக நான் உடல் ரீதியாக நன்றாக தயாராகி இருக்கிறேன். மனக் கவனம் மற்றும் ஆர்வத்துடன் சிறப்பாகத் தொடங்குவதற்கு இது முக்கியமானதாக இருக்கும்.
உலகக் கோப்பையில், எதுவும் நடக்கலாம். அனைத்து போட்டிகளும் மிகவும் கடினமானவை. அர்ஜென்டினா அதன் வரலாற்றின் காரணமாக எப்போதும் ஒரு முன்னணி அணியாக உள்ளது.
நான் நீண்ட காலமாக அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறேன். ஆனால் இதுவரை உலகக் கோப்பை வெல்லவில்லை என்பதால் நான் விமர்சனத்திற்கு உள்ளானேன்.
அதே வேளையில் இளம் வீரர்கள் அதிகமிருந்த அர்ஜென்டினா அணியுடன் 2021ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை வென்றோம். அந்த வெற்றி எங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
அர்ஜென்டினா மக்களும் அதை கொண்டாடினார்கள். அவர்கள் அர்ஜென்டினா அணி மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நாங்கள் எங்களை சாம்பியன்களாக கருதவில்லை. உலகின் எந்த அணியையும் எதிர்த்து விளையாடும் தகுதி எங்களுக்கு உள்ளது.
அதேவேளையில் உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஆட்டத்தையும் முக்கியமானதாக கருதுகிறோம்” என்று மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவுக்காக வெல்வாரா?
கடந்த 2006 ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கினார் மெஸ்ஸி.
அதுமுதல் தொடர்ந்து 5 முறை உலகக்கோப்பை அணியில் அவர் விளையாடிய போதும் ஒருமுறை கூட அர்ஜென் டினா அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் கத்தார் உலகக்கோப்பை தான் தான் பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பை என்று அறிவித்துள்ள மெஸ்ஸி,
அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்று கொடுப்பாரா என்பதே அவரது பல கோடி ரசிகர்களின் கேள்வியாக மாறியுள்ளது.
கடைசி போட்டி?
அதே நேரத்தில் கத்தார் தொடர் தனது கடைசி உலகக்கோப்பை என மட்டுமே தெரிவித்துள்ள மெஸ்ஸி தனது கடைசி போட்டி என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் உலகக்கோப்பை தொடருக்கு பிறகும் அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தீபாவளி ஷாப்பிங்… தி.நகருக்கு போகிறீர்களா? இதை கவனிங்க!