பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸில் அடி எடுத்து வைத்துள்ளார்.
29 வயதான சிந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட சாய் என்ற இளைஞரை திருமணம் செய்துள்ளார். போசிடஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சாய் இருக்கிறார். இந்த ஜோடியின் திருமண நிகழ்வுகள் டிசம்பர் 20-ஆம் தேதியிலிருந்து தொடங்கியது,.
சிந்துவின் திருமணம் உதய்பூரிலுள்ள ரஃப்பைல்ஸ் 5 நட்சத்திர விடுதியில் நேற்று (டிசம்பர் 22) பிரம்மாண்டமாக நடந்தது. ஆரவால்லி குன்றுகள் பின்னணியில் உதய்சாகர் ஏரிக்கு நடுவே இந்த ரிசார்ட் அமைந்துள்ளது. 101 அறைகள் இங்கு உள்ளன.
ஒரு அறையில் தங்க ஒரு இரவுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. Raffles Hotels & Resorts என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் இந்த ஹோட்டலை நடத்தி வருகிறது. உலகம் முழுக்க இந்த நிறுவனத்துக்குப் பல நாடுகளில் ஹோட்டல்கள் உள்ளன.

இந்த ரிசார்ட் ஐரோப்பிய, முகாலாய, ராஜ்புத் கட்டடக் கலையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. சிந்துவின் திருமணத்தில் நாடு முழுவதும் இருந்து 150 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு சரியாக 11. 20 மணிக்கு மணமகன் வெங்கட சாய், சிந்துவின் கழுத்தில் தாலி கட்டினார். இதையடுத்து, அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணமானாலும், தொடர்ந்தும் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து கவனம் செலுத்தப் போகிறார். கடந்த 2 வருடங்களாக பேட்மிண்டனில் எந்தப் பட்டத்தையும் வெல்லாத சிந்து, இரு வாரங்களுக்கு முன்பு சையத் மோடி தொடரில் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி 7 ஆம் தேதி அடுத்த தொடரில் பங்கேற்க அவர் மலேசியா செல்லவிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தேசிய கல்வி கொள்கையால் நாடு முன்னேறியுள்ளது : வேலைவாய்ப்பு திருவிழாவில் மோடி பேச்சு!