இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த பொசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் சி.இ.ஓவாக உள்ள வெங்கட் தத்தா சாய்க்கும் வரும் 22 ஆம் தேதி உதய்ப்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணம் குறித்து சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், ‘இரு குடும்பத்தினரும் முன்னரே அறிவோம். ஒரு மாதத்துக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடத்த தீர்மானித்தோம். ஜனவரி மாதத்தில் சிந்துவுக்கு போட்டிகள் உள்ளதால் டிசம்பர் 22 ஆம் தேதி நடத்துகிறோம். தொடர்ந்து, 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நடைபெறுகிறது. திருமணத்துக்கு பிறகு, மீண்டும் எவ்வளவு விரைவில் பயிற்சி பெற முடியுமோ அவ்வளவு விரைவில் சிந்து பயிற்சிக்கு திரும்புவார். டிசம்பர் 20 ஆம் தேதி திருமண சடங்குகள் தொடங்கும்’ என்றார்.
பேட்மிண்டன் உலகின் இந்தியாவின் முகமாக பார்க்கப்படும் சிந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உலக தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தவர். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய ஒரே இந்திய வீராங்கனை சிந்துதான். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை சிந்து வென்றார். தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலத்தையும் சிந்து கைப்பற்றினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2019 ஆம் ஆண்டு சிந்து தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
சிந்து திருமணம் செய்யவுள்ள வெங்கட் தத்தா சாய், பிபிஏ படித்தவர். ஹெச்.டி.எப்.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகளில் உயர் பணிகளில் இருந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது’… ஹாலிவுட் ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ டீசர்!