pv sindhu lost and out of denmark open badminton

டென்மார்க் ஓபன்: மீண்டும் பி.வி.சிந்து அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்று உலக பேட்மிண்டன் அரங்கில் தனது பெயரை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த இந்தியாவின் தங்க மங்கையான பி.வி சிந்து, 2023 டென்மார்க் ஓபன் தொடரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தோல்வியை சந்தித்து, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸே நகரில் நடைபெற்று வரும் இந்த BWF சூப்பர் 750 தொடரான டென்மார்க் ஓபனில், துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். காலிறுதி ஆட்டத்தில், உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் 12வது இடத்தில் உள்ள சிந்து, 19வது இடத்தில் உள்ள சுபனிடா கேட்தாங்கை 21-19, 21-12 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த அரையிறுதிப் போட்டியில், பேட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்துவின் பரம எதிரியாக கருதப்படும், தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள கரோலினா மரினை அவர் எதிர்கொண்டார்.

இதற்கு முன்னதாக, பி.வி.சிந்து – கரோலினா மரின் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 10 முறை கரோலினா மரின் பி.வி.சிந்துவை வீழ்த்தியுள்ளார். 5 முறை மட்டுமே சிந்து வெற்றியை தன்வசமாகியுள்ளார். கடைசியாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற மலேஷியா ஓபன் தொடரில் தான் பி.வி.சிந்து கரோலினா மரினை வீழ்த்தினார். அதன்பின், இவர்கள் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர், 4 முறையும் கரோலினா மரினே வெற்றி பெற்றுள்ளார்.

இப்படியான சூழலிலும், இந்த ஆண்டுக்கான முதல் பட்டத்தை நோக்கி பி.வி.சிந்து மேலும் ஒரு படி முன் நகர்வாரா என்ற மிகுந்த எதிர்பார்ப்புடனேயே, இந்த போட்டி துவங்கியது.

போட்டியின் துவக்கத்திலிருந்தே, ஒவ்வொரு புள்ளிக்காகவும், பி.வி.சிந்து மற்றும் கரோலினா மாரின் கடுமையாக மோதிக்கொண்டனர். ஆட்டம் கடும் நெருக்கடியிலேயே சென்றது. முதல் செட்டை கரோலினா 21-18 என கைப்பற்றிய நிலையில், 21-19 என 2வது செட்டை தன்வசமாக்கினார் பி.வி.சிந்து. ஆனால், 3வது செட்டில் துவக்கத்திலிருந்தே பெரும் ஆதிக்கத்தை செலுத்திய கரோலினா, 21-7 என மிகப்பெரிய புள்ளி வித்தியாசத்தில் அந்த செட்டை கைப்பற்றி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பி.வி.சிந்து, தொடர்ந்து 5வது முறையாக கரோலினா மரினிடம் தோல்வியை சந்தித்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

Image

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

2022 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதற்கு பிறகு, தனது இடது காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக, பி.வி.சிந்து பேட்மிண்டனில் இருந்து சிறிது காலம் ஒய்வு பெறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதன் காரணமாக, உலக சாம்பியன்ஷிப், உலக டூர் பைனல்ஸ் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

பின் காயத்தில் இருந்து மீண்டு, மீண்டும் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாட துவங்கிய பி.வி.சிந்து, இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். பல தொடர்களில், முதல் சுற்று, 2ம் சுற்றிலேயே வெளியேறிய சிந்து, ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி பதக்கத்தை வெல்ல தவறினார். அதன்பின், மலேஷியா மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதி வரை சென்றார். அமெரிக்க ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய தொடர்களில், காலிறுதி வரை பி.வி.சிந்து பயணித்தார்.

நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த வெற்றிப் பதக்கத்தை, பி.வி.சிந்து தனது அடுத்த தொடரில் கைப்பற்றுவார் என நம்புவோம்.

முரளி

எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்!

நானியை அச்சுறுத்தும் எஸ்.ஜே.சூர்யா

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts