கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மொஹாலி மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது.
ஆரம்பத்திலேயே 2 சிக்ஸர், 2 ஃபோர் பறக்கவிட்ட பிரப்சிம்ரன் சிங் 2-வது ஓவரிலேயே 23 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்ஷா கொல்கத்தாவின் பந்துகளை அடித்து நொறுக்கினார். இதனால் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது.
சிறப்பாக ஆடி வந்த பனுகா ராஜபக்ஷா அரைசதம் அடித்து(50) ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து தவானும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியதால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது.
கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான மந்தீப் சிங் 2 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த அனுகுல் ராயும் வந்த வேகத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் அடுத்து வந்த வீரர்களில் வெங்கடேஷ் ஐயர், அன்ரே ரஷல் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதற்கிடையே 16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து கொல்கத்தா அணி 146 ரன்களை சேர்த்திருந்த நிலையில் வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்த பஞ்சாப் அணி வீரர் அர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா