ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் பஞ்சாப்- கேரளா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் போது, எதிர் அணி வீரர் ஒருவரின் தலையை மற்றொரு வீரர் முட்டி உடைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியுடன் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி கொச்சியில் மோதியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் போது, கேரள அணி வீரர் ராகுல் பஞ்சாப் அணி வீரர் லூகா மீது மோசமான முறையில் பவுல் செய்தார். அதாவது, பந்தை கைப்பற்றும் சாக்கில் ராகுல், லூகாவின் தலையில் முட்டினார்.
இதில் லூகாவின் தாடை பகுதி உடைந்து போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரால் 6 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வளவு மோசமாக பவுல் ஆட்டம் ஆடிய ராகுலுக்கு ரெட் கார்டு காட்டப்படவில்லை. மாறாக மஞ்சள் அட்டையே கொடுக்கப்பட்டது. லூகா பஞ்சாப் அணியின் ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ஆவார். எனவே, அவரை வேண்டுமென்றே குறி வைத்து இந்த தாக்குதலை ராகுல் நடத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கவனத்துக்கு பஞ்சாப் அணி கொண்டு சென்றுள்ளது. இது குறித்து, பஞ்சாப் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்ரோஷமான ஆட்டம் களத்தில் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை. கேரள அணி வீரரின் பவுல் ஆட்டம் தேவையற்றது . இந்த பவுல் ஆட்டம் காரணமாக லூகா 6 முதல் 8 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
விரைவில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு கமிட்டி கூடி, கேரள அணி வீரர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திருப்பதி லட்டு… ‘சனாதன தர்ம ரக்ஷ்னா’ வாரியம் அமைக்க பவன் கல்யாண் கோரிக்கை!
இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட விமானம்… அம்பானி வாங்கியது ஏன்?