pt usha olympics

“ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை கெளரவிக்காதது வருத்தம்” – பி.டி.உஷா

விளையாட்டு

இந்தாண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கௌரவிக்காதது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைந்தது.

இதில் இந்திய அணி ஒரு வெள்ளிப் பதக்கமும் ஐந்து வெண்கல பதக்கமும் என மொத்தம் ஆறு பதக்கங்கள் வென்றது. இது மட்டுமல்லாமல், பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதிச் சுற்றுவரை சென்ற வினேஷ் ஃபோகத் எடை சற்று அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் ‘பய்யோளி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படுகிற முன்னாள் தடகள வீரர் பி.டி உஷா இன்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் “2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக 6 பதக்கங்கள் வென்று, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்து கௌரவிக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

நான் பலமுறை முயற்சி செய்த பின்பும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களைப் பாராட்ட எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.

இது மட்டுமல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் செய்வதற்காக ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.2 லட்சமும், பயிற்சியாளர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்குவதற்கான ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது.

ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிதிக் குழு மற்றும் பொருளாளர் சஹ்தேவ் யாதவ் இந்த முன்மொழிவைத் தடுத்து நிறுத்திவிட்டார். இந்த நிதி வழங்கப்பட்டிருந்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒவ்வொரு வீரரும் இன்னும் சிறப்பாக விளையாடி இருப்பார்கள்” என்று பி.டி. உஷா கூறியுள்ளார்.

மேலும் “இப்படிப் பாராட்டு விழா நடத்தாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் செயற்குழுவின் ஒத்துழையாமைதான். கோவிட்-19 காலகட்டத்தில் கூட டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்படி இருக்கும் போது, இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்குப் பாராட்டு விழாவை ஏன் செயற்குழு ஏற்பாடு செய்யவில்லை?

இந்திய ஒலிம்பிக் சங்கம் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை பரிசுத் தொகை வழங்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்யாததால், நமது நாட்டு வீரர்களை அது கை விட்டுள்ளது.

அதனால் உடனடியாக பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்து, அவர்களுக்குப் பரிசளித்துக் கௌரவிக்க வேண்டும் “ என்று பி.டி. உஷா வலியுறுத்தி உள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

8 ஆண்டுகளுக்கு பிறகு புகார் ஏன்?- சித்திக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேள்வி!

யாரும் என்னை பார்க்க வரவேண்டாம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *