உலகம் முழுவதிலும் இருந்து 405 வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் பின்னர், ஐபிஎல் -இன் 16 வது சீசன் 2023 ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் தொடருக்கு போட்டியாக உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் அதில் எந்த தொடராலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை பாதியளவு கூட தொட முடியவில்லை. அந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த 2016 முதல் பிஎஸ்எல் தொடரை நடத்தி வந்தாலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை தொட முடியவில்லை என்றும் அத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ஐபிஎல் தொடரில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் வாங்கும் ஒரு வருட சம்பளத்துக்கு கூட சமமாக இல்லை எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் உலகில் இருக்கும் டி20 தொடர்களிலேயே பிஎஸ்எல் தான் சிறந்தது என்று கூறியுள்ளார். குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த சர்வதேச வீரர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரும் அளவுக்கு பிஎஸ்எல் தொடர் மிகவும் தரமானது என்று தெரிவிக்கும் அவர், இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு ; “பிஎஸ்எல் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
ஆரம்பத்தில் பிஎஸ்எல் வெற்றி பெறாது என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் கிரிக்கெட் வீரர்களான நாங்கள் பிஎஸ்எல் வெற்றி அடைந்ததாக உணர்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் , “இங்கே ஐபிஎல் இருக்கலாம். ஆனால் இந்த உலகில் பிஎஸ்எல் தொடரில் விளையாடிய எந்த வீரரை வேண்டுமானாலும் கேளுங்கள். அவர்கள் பாகிஸ்தான் தொடர் தான் உலகிலேயே மிகவும் கடினமான லீக் தொடர் என்று நிச்சயமாக சொல்வார்கள். இங்கு ரிசர்வ் ஆன வீரர்கள் கூட சர்வதேச அளவிலான வீரர்களாக இருந்தாலும் பெஞ்சில் அமர்ந்துள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் நல்ல பேக் அப் வீரர்களை பெற்றுள்ளது. அதற்கான பாராட்டை பிஎஸ்எல் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“கோவை தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே எடுக்கப்படும்” – அரசு அறிவிப்பு!
ஒரே ஆர்டர் ஸ்விகியை திரும்பி பார்க்க வைத்த பெங்களூர் வாடிக்கையாளர்!