நாட்டிற்காக வென்ற பதக்கங்களை இன்று (மே 30) கங்கையாற்றில் வீச உள்ளதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியைப் பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த மே 28 ஆம் தேதி நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவல்துறையினர் இரும்பு தடுப்பு வைத்து மல்யுத்த வீரர்களை தடுத்தபோது இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தர தரவென இழுத்து சென்றும், தூக்கி சென்றும் கைது செய்தனர். இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், “முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசவிருப்பதாக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியும் கொடூரமாக கைது செய்யப்பட்டோம். போராட்டம் நடத்திய இடத்தையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டு எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டு போராடும் பெண்கள் மற்றும் மல்யுத்த வீரர்கள் ஏதேனும் குற்றம் செய்திருக்கிறார்களா?. காவல்துறையும் எங்களை குற்றவாளிகளைப் போல நடத்துகின்றனர்.
நாங்கள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற அந்த தருணம் எங்களுக்கு நினைவிருக்கிறது. இப்போது எங்கள் கழுத்தில் அணியும் இந்த பதக்கங்களுக்கு அர்த்தம் இல்லை என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி எங்களை இந்தியாவின் மகள்கள் என்றார். ஆனால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு எங்களுக்கு எதிரானவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த புத்திசாலித்தனமான அமைப்பில் நமது இடம் எங்கே? இந்தியாவின் மகள்கள் எங்கே? இந்தப் பதக்கங்கள் இனி நமக்குத் தேவையில்லை. ஏனென்றால் அவற்றை அணிவதன் மூலம் நம்மை நாமே மறைத்துக் கொள்கிறோம்.
இந்த பதக்கங்களை அடைய நாங்கள் கடுமையாக உழைத்தோம். இந்த பதக்கங்கள் முழு தேசத்திற்கும் புனிதமானவை. புனித பதக்கத்தை வைத்திருக்கச் சரியான இடம் புனிதமான கங்கை அன்னையே தவிர, நம்மைச் சாதகமாக்கிக் கொண்டு நம்மை ஒடுக்குபவர்களுடன் நிற்கும் புனிதமற்ற அமைப்பு அல்ல. எனவே இன்று மாலை 6 மணிக்கு பேரணியாக சென்று ஹரித்வாரில் உள்ள கங்கையில் பதக்கங்களை மிதக்க விடுவோம்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் இடம் இந்தியா கேட். எனவே இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
சிஎஸ்கே வெற்றிக்கு யார் காரணம்? அமைச்சருக்கு அண்ணாமலை பதில்!
சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வெற்றிக்கோப்பை!