விராட் கோலியுடன் இணைந்து விளையாடுவதை பாக்கியமாக கருதுவதாக இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ரோகித் சர்மா 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் ஜெய்ஸ்வால் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். அந்த வகையில், 74 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என மொத்தம் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், தான் ஆட்டமிழந்த விதம் தவறான ஒன்று என்றும், அது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்வது அற்புதமாக இருக்கிறது. அவர் ஒரு லெஜண்ட் அவருடன் இணைந்து விளையாடுவதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.
அவரைப் போன்ற சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விசயங்கள் என்னுடைய எதிர்காலத்திற்கு பயன்படும்”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் ஆட்டமிழந்த விதம் உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது சகஜம் தான். ஆனாலும் இதிலிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
அதோடு இனிவரும் போட்டிகளில் இது போன்ற தவறுகளை சரிசெய்து அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.
எப்பொழுது நான் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் என்னால் முடிந்த அளவிற்கு நீண்ட நேரம் விளையாடி பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே விளையாடுகிறேன்.
இம்முறை சதம் அடிக்காததில் சற்று வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் அணிக்காக என்னுடைய பங்களிப்பை முடிந்தவரை வழங்கி உள்ளதாக கருதுகிறேன். இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்