காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்.
இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை 22 ஆவது காமன்வெல்த் போட்டி நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 215 பேர் கொண்ட அணி கலந்து கொண்டுள்ளது.
இதில் மீராபாய் சானு முதலில் நடைபெற்ற ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியில் 84 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 88 கிலோ எடையையும் தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 90 கிலோ எடையை தூக்க முயற்சித்தும் அவரால் சரியாக தூக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து நடைபெற்ற கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் தனது முதல் முயற்சியில் 109 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 113 கிலோ எடையையும் தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 115 கிலோ எடையை தூக்க முயற்சித்து தோல்வி அடைந்தார்.
இருப்பினும், ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்ட் ஜெர்க் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக 201 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு தங்கபதக்கத்தை வென்றார்.
மீராபாய் சானு இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் 2018 ஆம் ஆண்டு தங்கபதக்கமும் 2014 ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்றிருக்கிறார். கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் 2020ல் வெண்கல பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் 2017ல் தங்கபதக்கமும் வென்றார்.
காமன்வெல்த் பளு துக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் சங்கத மகாதேவ் சர்கார் மொத்தம் 248 கிலோ பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். 61 கிலோ பளு தூக்கும் பிரிவில் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையைத் தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மகளிர் 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி பிந்தயராணி தேவி வெள்ளி பதக்கத்தை வென்றார்.
பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோனிஷா