இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டர் ஆன 15 வயது சிறுவன்!

விளையாட்டு

பாகு ஓபன் 2023 சாம்பியன் பட்டம் வென்ற பிரணீத் வுப்பாலா தெலுங்கானாவின் ஆறாவது மற்றும் இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 16 வயதான பிரணீத் வுப்பாலா.  விஸ்வ சைதன்யா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2021 ஆண்டு வரை ரேஸ் அகாடமியில் புகழ்பெற்ற செஸ் பயிற்சியாளரான ராம ராஜுவிடம் பயிற்சி பெற்றார்  பிரணீத். தற்போது இஸ்ரேல் கிராண்ட் மாஸ்டர் விக்டர் மிகலேவ்ஸ்கியிடம் பயிற்சி பெறுகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற பிரணீத் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜூலை மாதத்தில், அவர் Biel MTO தொடரில் தனது இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

அதன்பின்னர் கடந்த மாதம் ஸ்பெயினில் நடந்த ஃபார்மென்டெரா சன்வே சர்வதேச செஸ் விழாவில் அவர் தனது மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து அசர்பைஜானில் நடைபெற்ற பாகு ஓபன் செஸ் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் GM ஹான்ஸ் நீமனை தோற்கடித்தார்.

இதன் மூலம் 2,500 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற பிரணீத் வுப்பாலா இந்தியாவின் 82வது மற்றும்  தெலுங்கானா மாநிலத்தின் ஆறாவது கிராண்ட்மாஸ்டர் என்ற தகுதியை அடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது அடுத்த இலக்கு 2,600 ரேட்டிங் புள்ளிகளை எட்டுவது தான். அதற்காக நான் எந்த காலக்கெடுவையும் அமைக்கவில்லை, ஆனால் விரைவில் அதை அடைய விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

அவர் மேலும், “2,800 ரேட்டிங் புள்ளிகளை அடைந்து உலக சாம்பியனாக வேண்டும். ஆனால் இப்போதைக்கு எனது கவனம் அடுத்த போட்டியில் மட்டுமே உள்ளது.

அடுத்த மாதம் கஜகஸ்தானில் தொடங்கும் ஆசிய கான்டினென்டல் போட்டியில் பங்கேற்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

CSKvsKKR : பழித்தீர்த்த கொல்கத்தா… நன்றி தெரிவித்த சென்னை

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0