பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் டி20 போட்டியை அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் நேரில் கண்டுகளித்த மைதானம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு மே 29ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது.
1,10,000 இருக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டியை காண்பதற்காக 1,01,566 பேர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியின் மூலம் அதிக பார்வையாளர்களால் நேரில் பார்க்கப்பட்ட டி20 போட்டி மற்றும் மைதானம் என்ற புதிய கின்னஸ் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி மைதானம் படைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இதற்கான சாதனை சான்றிதழை கின்னஸ் நிறுவனம், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் இன்று (நவம்பர் 27) வழங்கியுள்ளது.
இதுகுறித்து “இந்தியா கின்னஸ் சாதனை படைத்தது அனைவருக்கும் பெருமையான தருணம். இது அனைத்து ரசிகர்களின் ஈடு இணையற்ற ஆர்வம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்காக கிடைத்தது” என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது பதிவில், “2022 ஐபிஎல் டி20 இறுதிப் போட்டியை பிரதமர் மோடி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கண்டுகளித்ததற்காக கின்னஸ் உலக சாதனையைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
1982 இல் கட்டப்பட்ட மோதாரா ஸ்டேடியம், கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
களைகட்டிய கத்தார்: கலங்கடிக்கும் ஒட்டகக் காய்ச்சல்!
”உண்மையிலேயே சின்னவர் நான் தான்!” : சீமான்