உலக கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவு செய்தி ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மனிதன் தனக்கும் தன்னைச் சார்ந்த சமூகத்திற்கும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்கு சிறந்த உதாரணம் பீலே. அதை தன் வாழ்வின் மூலம் உணர்த்தியவர்.
மக்களை ஒன்றிணைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உலகெங்கும் நிற வெறி தலைவிரித்து ஆடிய காலத்தில் விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு மாற்றத்தை கொண்டுவந்தவர் பீலே. இவரின் வருகைக்கு பிறகு கால்பந்து அசுர வளர்ச்சி அடைந்தது .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் பீலேவுக்கு புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சையில் இருந்த பீலே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் , கடைசி பதிவாக பீலே உலகக்கோப்பை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
1958 ல், என் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தெருவில் நடந்து கொண்டிருந்தேன். இன்றும் பலர் அதேபோன்ற வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, முதல் உலகக் கோப்பையைத் தேடிச் செல்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.. மருத்துவமனையில் இருந்து நிச்சயம் நான் உலகக்கோப்பை போட்டிகளை பார்த்து ஆதரவு அளிப்பேன், வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
தாம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட கால்பந்தின் எதிர்காலம் குறித்தும், உலகக்கோப்பை வெல்ல வீரர்களுக்கு பீலே வாழ்த்து கூறியதும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன் வாழ்நாள் முழுவதும் கால்பந்தை உயிர் மூச்சாய் நேசித்த பீலே இறந்தது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகம் தான்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Comments are closed.