கால்பந்து நட்சத்திரம் பீலே புற்றுநோய் காரணமாக ஒரு மாதமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் நேற்று இரவு (டிசம்பர் 29 )காலமானார்.
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் பீலே. கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அண்மையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 82.
பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான பீலே, கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், செப்டம்பரிலிருந்து கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் உடல்நலம் மோசமடையவே பீலே சாவோபாவ்லோ மாகாணத்தின் போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில், பீலே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக, அவரது மகள் கெல்லி நஸிமென்டோ இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பீலே உயிரிழந்தார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்