சேலம் அருகே கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் ஷூ காலால் எட்டி உதைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் நிர்மலா மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், நடந்த கால்பந்து போட்டியில் நிர்மலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை வரிசையாக அமர வைத்து, சரமாரியாக திட்டி, கன்னத்தில் அடித்துள்ளார். சில மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த பெற்றோரும் கடும் வேதனையடைந்தனர்.
இதையடுத்து , ஆசிரியர் அண்ணாமலைக்கு கண்டனம் குவிந்து வருகிறது. இதையடுத்து, ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான் என்பதை உணராதவர் எப்படி விளையாட்டு ஆசிரியராக இருக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செல்போனில் மூழ்கிக் கிடக்கும் சிறார்களுக்கு மத்தியில் விளையாட்டை தேர்வு செய்து ஆர்வம் செலுத்தும் மாணவர்களை உடற் கல்வி ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடத்தினால்தானே அவர்களுக்கு ஆர்வம் பெருகும் என்றும் இல்லையென்றால் ஆசிரியருக்கு பயந்தே விளையாட்டுக்கு மாணவர்கள் முழுக்கு போட்டு விடுவார்களே என்றும் சமூக ஆர்வலர்கள் அந்த ஆசிரியரை குறை கூறியுள்ளனர். இதற்கிடையே, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு இது நல்ல பாடமாக அமையும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-எம். குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paris Olympics 2024: ஏமாற்றத்துடன் நிறைவடைந்த இந்தியாவின் பயணம்!
வஹாப் முன்னேற்றக் கழகம்? கொந்தளிப்பில் நெல்லை திமுக- தொடரும் மோதல்!