சொந்தமண்ணில் மோசமான தோல்வியை தழுவிய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி ஒயிட் வாஷ்(3-0) செய்து தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும்.
சொந்தமண்ணில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மோசமான தோல்வியை தழுவிய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பரிந்துரையின் பேரில் பிசிபி தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அவரது பதவியில் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி நஜாம் சேத்தி பிசிபி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 14 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளதாகவும், குழுவின் விவகாரங்களை நடத்த சேத்தி தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு மாதங்களுக்குள் கிரிக்கெட் வாரிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரமீஸ் ராஜாவின் தலைவர் பதவி பறிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்றாண்டு பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரமீஸ் ராஜா, ஓராண்டு முடிந்த நிலையில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நஜாம் சேத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ரமீஸ் ராஜா தலைமையிலான கிரிக்கெட் ஆட்சி இப்போது இல்லை.
2014 பிசிபி அரசியலமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. முதல்தர கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளிக்க நிர்வாகக் குழு அயராது பாடுபடும். ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள். கிரிக்கெட்டில் பஞ்சம் முடிவுக்கு வரும்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை!
திருமணங்கள், கூட்டங்களைத் தவிர்க்கவும்: ஐஎம்ஏ அறிவுறுத்தல்!