மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மேரி கம்மின்ஸ் இன்று (மார்ச் 10) உயிரிழந்தார்.
2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வந்த அவர், தனது தாயார் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். இதனால் அவரால் தொடரை முழுமையாக ஆட முடியவில்லை. இரண்டு ஆட்டங்கள் மட்டுமே ஆடினார்.
போட்டியிலிருந்து விலகியது குறித்து பேட் கம்மின்ஸ், “எனது தாயார் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்த தருணத்தில், நான் எனது குடும்பத்துடன் இருப்பது தான் நல்லது. என்னுடைய சூழலை புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகிகளுக்கும், வீரர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
மரியா கம்மின்ஸ் 2005-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக அவர் நோயால் மிகவும் அவதிப்பட்டார். இந்தநிலையில், இன்று மரியா கம்மின்ஸ் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மரியா கம்மின்ஸ் மறைவிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சார்பாக இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் வீரர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்