த்ரில் வெற்றியுடன் தங்கம் கைப்பற்றிய பாருல்: 10வது நாளிலும் ‘இந்தியா’ அசத்தல்!

Published On:

| By christopher

கடந்த செப்டம்பர் 23 அன்று, சீனாவின் ஹாங்சோ நகரில் பிரம்மாண்ட துவக்க விழாவுடன் துவங்கிய 19வது ஆசிய போட்டிகளில், பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடைபெற்று வரும் தடகள போட்டிகளிலும், இந்தியா தொடர்ந்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இன்றைய (அக்டோபர் 3) 10வது நாள் ஆட்டத்தில், இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

பதக்கம் வென்ற வீரர்களின் விவரம்!

தடகள போட்டிகளில், மகளிருக்கான 5000 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடைசி 10 வினாடிகளில் வெற்றிக்கோட்டை நெருங்கிய ஜப்பான் வீராங்கனையை தாண்டி அவர் போட்டியில் வென்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

முன்னதாக, இந்த 2023 ஆசிய போட்டிகளில், 3000 மீ ஸ்டீபில்சேஸ் பிரிவிலும் கலந்துகொண்ட பாருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து, மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் அன்னு ராணி 62.92 மீ தூரத்திற்கு ஈட்டியை எரிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஆடவர் டெகத்லான் பிரிவில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில், 7666 புள்ளிகள் சேர்த்த தேஜஸ்வின் சங்கர், புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.

ஆடவருக்கான 800 மீ ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் முகமது அஃப்சல் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இவர்களுடன், தடகள போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வித்யா ராம்ராஜ் மற்றும் மும்முறை நீளம் தாண்டுதலில் பிரவீன் சித்ரவேல் ஆகியோரும் இந்தியாவுக்காக வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இதன்மூலம், இன்று மட்டும் தடகள போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை கைப்பற்றியது.

முன்னதாக, படகு போட்டியின் 1000 மீ ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் சிங் மற்றும் சுனில் சிங் இணை வெண்கல பதக்கத்தை வென்றது.

பின், குத்துச்சண்டை ஆட்டத்தில், மகளிர் 54 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ப்ரீத்தி பவார் வெண்கல பதக்கத்தை வென்றார். அதேபோல, ஆடவர் 92 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நரேந்தர் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன்மூலம், இந்த 2023 ஆசிய போட்டிகளில், 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என 69 பதக்கங்களுடன், இந்தியா தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாரிமுத்துவை தொடர்ந்து டைமிங்கும் மாற்றம்: எகிறும் எதிர்நீச்சல் சீரியல்!

பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு : ‘நியூஸ் க்ளிக்’ அலுவலகத்துக்கு சீல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel