பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் ஐஐடி பட்டதாரி வீரர் என்ற புதிய சாதனையை நிதேஷ் குமார் படைத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து பாரிஸிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு SL3 பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமாரும், பிரிட்டனின் டேனியல் பெத்தேலும் மோதினர்.
முதல் செட்டை 21-14 என்ற என்ற கணக்கில் நிதேஷ் வென்ற நிலையில், 18-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.
வெற்றியை தீர்மானிக்கும் கடைசி சுற்றில் இருவரும் கடுமையாக போராடிய நிலையில், அபாரமாக விளையாடி 23-21 என்ற கணக்கில் டேனியலை வீழ்த்தி நிதேஷ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். பாராலிம்பிஸ் பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது பாரீஸ் பாராலிம்பிக்ஸில் இந்தியா வென்ற இரண்டாவது தங்கப் பதக்கமாகும். முன்னதாக பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
யார் இந்த நிதேஷ் குமார்?
1994 ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த நிதேஷ் குமார், கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கியதை தொடர்ந்து தனது இடது காலை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு வருடம் படுத்த படுக்கையாக இருந்த நிதேஷ்குமாரின் வாழ்க்கை அவ்வளவு தான் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் படிப்பில் படுகெட்டியான அவர் அந்த ஒரு வருடத்தை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக பயன்படுத்திக் கொண்டார்.
அந்த உழைப்பின் பலனால் 2013ஆண்டு ஐஐடி மண்டியில் மேற்படிப்பு பயில வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் பேட்மிண்டனில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து அதில் கவனம் செலுத்தினார். அது விருட்சமாக வளர அவர் பாரா பேட்மிண்டன் வீரராக உருவெடுத்தார்.
அதன்படி தனது பயணத்தை 2016ல் நடைபெற்ற பாரா தேசிய சாம்பியன்ஷிப்பில் ஹரியான அணிக்காக தொடங்கினார் நிதேஷ் குமார். 2017ல் ஐரிஷ் பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனலில் தனது முதல் சர்வதேச பட்டத்தை வென்றார். தொடர்ந்து ஆசிய பாரா கேம்ஸ் மற்றும் BWF பாரா-பேட்மிண்டன் வேர்ல்ட் சர்க்யூட் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் பதக்கங்களையும் வென்றார்.
2019 மற்றும் 2022ல் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2024ல் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் மூன்று பதக்கங்களை வென்றார். மேலும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றார்.
இந்த சாதனைகள் உலக அரங்கில் நிதேஷை முதல்நிலை பாரா-பேட்மிண்டன் வீரராக உயர்த்தியது.
தற்போது ஹரியானாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறையின் மூத்த பேட்மிண்டன் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் நிதேஷ், தற்போது பாரீஸ் பாராலிம்பிஸில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற ஐஐடி பட்டதாரி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதன்மூலம் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் உலக அரங்கில் நமது அடையாளத்தை பதிக்கலாம் என்ற நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளார் நிதேஷ் குமார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கேரளா சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளிக்காதது ஏன்? ராதிகா விளக்கம்!