Sumit Antil: பாரிஸில் நடைபெற்றுவரும் 2024 பாராலிம்பிக் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இதே ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவில் சுமித் அன்டில் தங்கம் வென்றிருந்தார். அந்த தொடரில் 68.55மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து பாராலிம்பிக் சாதனையையும் படைத்திருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற 2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவு இறுதிப் போட்டியில், தனது முதல் வாய்ப்பிலேயே 69.11மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தனது சாதனையை தானே முறியடித்தார்.
தொடர்ந்து தனது 2வது வாய்ப்பில் 70.59மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த சுமித் அன்டில், மீண்டும் தனது சாதனையை தானே முறியடித்து புதிய பாராலிம்பிக் சாதனையையும் படைத்தார்.
இதன்மூலம் இந்த தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற சுமித் அன்டில், தொடர்ந்து 2 முறை பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
26 வயதில் இந்தியாவின் நட்சத்திர நாயகனாக சுமித் அன்டில் மாறியுள்ள நிலையில், பெரிய மல்யுத்த வீரராக உருவெடுத்து இந்திய ராணுவத்தில் இணைய வேண்டும் என்பதே சுமித் அன்டிலின் கனவாக இருந்தது.
ஆனால், 2015ஆம் ஆண்டு, ஒருநாள் சுமித் அன்டில் டியூசனில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரின் வாகனம் மீது லாரி ஒன்று மோதியதில், அவரின் இடது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, மல்யுத்த கனவு மாயமான நிலையில், ராம்ஜாஸ் கல்லூரியில் பி.காம் பயின்றுகொண்டிருந்த சுமித் அன்டிலுக்கு, ராஜ்குமார் என்ற பாரா-விளையாட்டு வீரர் மூலம் ஒரு புதிய கதவு திறந்தது.
டெல்லியில் பயிற்சியாளர் நிதின் அகர்வாலுக்கு கீழ் பயிற்சி பெறத் துவங்கிய சுமித் அன்டில், தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்று விளையாட்டு உலகத்தின் கவனத்தை ஈர்க்க துவங்கினார். இதன் விளைவாக, 2019-இல் கோ ஸ்போர்ட்ஸ் அவரை பாரா சாம்பியன்ஸ் திட்டத்தில் இணைத்தது.
பின், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்று, விளையாட்டு ரசிகர்கள் மனதில் தனது முத்திரையை பதித்தார், சுமித் அன்டில்.
2022 ஆசிய போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அன்டில், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார். 2023 & 2024 என தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
தற்போது, 2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக 3வது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார், சுமித் அன்டில்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இம்முறை ‘தேவா’-வாக ரஜினி… ‘கூலி’ படம் அப்டேட்!
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வா?
Paris Paralympics 2024: ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’!
வேலைவாய்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் பணி!