2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரை தொடர்ந்து, அங்கு பாரா ஒலிம்பிக் தொடர் வரும் ஆகஸ்ட் 28 அன்று துவங்கவுள்ளது. செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், 23 விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த விளையாட்டு தொடரில், இந்தியா சார்பில் 12 விளையாட்டு பிரிவுகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில் 38 வீரர், வீராங்கனைகளும், பேட்மிண்டன் போட்டிகளில் 13 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி 25-30 பதக்கங்களை வெல்லும் என, இந்திய பாரா ஒலிம்பிக் அமைப்பு துணைத் தலைவர் சத்ய பிரகாஷ் சங்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொடரில் 8-10 தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில், இந்த அணியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள சத்ய பிரகாஷ் சங்வான், “நமது விளையாட்டு வீரர்கள் நன்றாக தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்”, எனவும் தெரிவித்துள்ளார்.
1960 முதல் பாரா ஒலிம்பிக் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், 1968-ஆம் ஆண்டு நடைபெற்ற டெல் அவிவ் தொடரிலேயே இந்தியா முதல் முறையாக பங்கேற்றது. 1972 ஹெய்டெல்பர்க் தொடரில், இந்தியா தனது முதல் பாரா ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது. நீச்சல் போட்டியில் முரளிகாந்த் பெட்கர் தங்கத்தை வென்று கொடுத்தார்.
தொடர்ந்து 12 ஆண்டு இடைவேளைக்கு பின், 1984 பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 5 வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று கொடுத்து அசத்தினர். அதில் குறிப்பாக ஜோகிந்தர் சிங் பேடி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் என 3 தடகள விளையாட்டு பிரிவுகளில் 1 வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.
இதை தொடர்ந்து நடைபெற பாரா ஒலிம்பிக் தொடரில் பெரிதாக சோபிக்காத இந்தியா, 2016 ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில் 2 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயர் தூண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
அடுத்து நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், முதன்முறையாக 54 பேர் கொண்ட அணியுடன் பங்கேற்ற இந்தியா, 5 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று அசத்தியது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில், துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா, மனிஷ் நர்வால், பேட்மிண்டனில் தங்கம் வென்ற கிருஷ்ணா நகர், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்டில் ஆகியோர் இந்த பாரிஸ் தொடரில் மீண்டும் தங்கத்தை குறிவைத்து களமிறங்குகின்றனர்.
அதேபோல, ரியோவில் தங்கம், டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை குறிவைத்து பாரிஸில் களம் காண்கிறார்.
இந்நிலையிலேயே, 2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கொடியை அறிமுகம் செய்யும் விஜய் முதல் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு வரை!
பியூட்டி டிப்ஸ்: உடற்பயிற்சி… இந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க மறந்து விடாதீர்கள்!
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் முளைப்பயறு சாலட்
கொடி பறக்குதா? – அப்டேட் குமாரு