2024 பாராலிம்பிக்ஸ் தொடர் பாரிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த விளையாட்டுத் தொடரில் 84 வீரர், வீராங்கனைகளுடன் பங்கேற்ற இந்திய அணி, தொடர்ந்து மிரட்டலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 3 அன்று மட்டும் 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் T63 பிரிவு இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த ‘தங்க மகன்’ மாரியப்பன் தங்கவேலு பங்கேற்றார்.
இந்த போட்டியில், அதிகபட்சமாக 1.85 மீ உயரம் வரை தாண்டிய மாரியப்பன் தங்கவேலு, 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மாரியப்பன் தங்கவேலுவுக்கு இது 3வது பாராலிம்பிக் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கப் பதக்கத்தையும், டோக்கியோவில் நடைபெற்ற தொடரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இதே போட்டியில், மற்றோரு இந்திய வீரரான சரத் குமார் 1.88 மீ உயரம் வரை தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சரத் குமாருக்கு இது 2வது பாராலிம்பிக் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அதேபோல, மறுபுறத்தில் நடைபெற்ற ஆடவர் ஈட்டி எறிதல் F46 பிரிவு இறுதிப்போட்டியிலும், இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் 65.62 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அஜீத் சிங் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவருக்கு அடுத்தபடியாக, 64.96 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த சுந்தர் சிங் குர்ஜர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும், முன்னதாக நடைபெற்ற மகளிர் 400 மீ T20 பிரிவு ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில், பந்தய தூரத்தை 55.82 வினாடிகளில் கடந்த இந்தியாவின் தீப்தி ஜீவாஞ்சி, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், பாரிஸ் பாராலிம்பிக் தொடரின் 6வது நாள் ஆட்டங்களில், இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.
இதன் காரணமாக, 2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, 2020 டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, தற்போது பதக்கப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ளது. தடகளப் போட்டிகளில் மட்டும், தற்போது வரை 1 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என இந்தியா 10 பதக்கங்களை வென்றுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈசிஆரில் கோர விபத்து: உடல் நசுங்கி 4 பேர் பலி!
வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வேயில் பணி!
பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை: நிறைவேறிய மசோதா!