2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரின் 5வது நாளான செப்டம்பர் 2 அன்று, இந்தியா 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே, 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் 25 பதக்கங்களை வெல்வோம் என இந்திய அணி நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர், வீராங்கனைகள் 2024 பாராலிம்பிக்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தனர்.
2020 டோக்கியோ பாராலிம்பிக் தொடரில், ஆடவர் வட்டு எறிதல் F56 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியா, இந்த தொடரிலும் வெள்ளிப் பதக்கம் வென்று, 5வது நாளில் இந்தியாவின் பதக்க பட்டியலை துவங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, பாரா பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில், ஒரு மிக நெருக்கமான போட்டியில் கிரேட் பிரிட்டனின் டேனியல் பெத்தேலை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்திய நிதேஷ் குமார் தங்கப் பதக்கத்தை வென்றார்.
பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SU5 பிரிவின் இறுதிப்போட்டியில், சீனாவை சேர்ந்த யாங் கியூஷியாவிடம் 17-21, 10-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்த துளசிமதி முருகேசன்,
வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர். அதேவேளையில், இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற ஆட்டத்தில், டென்மார்க்கை சேர்ந்த கேத்ரின் ரோசன்கிரென்னை 21-12, 21-8 என வீழ்த்திய மனிஷா ராமதாஸ், பதக்கத்தை தன்வசமாக்கினார்.
பின், பாரா பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவின் இறுதிப்போட்டியில் களமிறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுஹாஸ் யாத்திராஜ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகஸ் மசூரிடம் 9-21, 13-21 என தோல்வியை சந்தித்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். இது சுஹாஸ் யாத்திராஜ்ஜின் 2வது பாராலிம்பிக் வெள்ளிப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடைபெற்ற கலப்பு குழு காம்பௌண்ட் வில்வித்தை பிரிவில், நூலிழையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியாவின் ராகேஷ் குமார் – ஷீத்தல் தேவி இணை, இத்தாலி அணியை 156-155 என வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. காம்பௌண்ட் வில்வித்தை பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பாராலிம்பிக் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து, ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவில் களமிறங்கிய இந்தியான நட்சத்திர வீரரான சுமித் அன்டில், மீண்டும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். மேலும், இப்போட்டியில் 70.59மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, புதிய பாராலிம்பிக் சாதனையையும் சுமித் அன்டில் படைத்திருந்தார்.
கடைசியாக, பாரா பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் SH6 பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடிய தமிழக வீராங்கனை நித்யஸ்ரீ சிவன், இந்தோனேஷியாவின் மர்லினா ரீனாவை21-14, 21-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம், 2024 பாராலிம்பிக் தொடரின் 5வது நாளில், இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றது.
இவற்றுடன், இந்த தொடரில் தற்போது வரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, பதக்கப் பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: புதினா ஓமப்பொடி!
டாப் 10 செய்திகள் : மோடி புரூனை பயணம் முதல் தமிழகத்தில் மழை வரை!
ஹெல்த் டிப்ஸ்: உடல்வலிக்கு ஒத்தடம் கொடுக்கலாமா?
2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகள்!