2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26 அன்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் 32 விளையாட்டு பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த ஒலிம்பிக் தொடருக்கான தீபம் ஏப்ரல் 16 அன்று ஏற்றப்பட்ட நிலையில், அது பல்வேறு நாடுகள் வழியாக பயணித்து, ஜூலை 14 அன்று பாரிஸ் வரவுள்ளது. பின், அந்த நகருக்குள் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் இந்த ஒலிம்பிக் பந்தம், ஜூலை 26 அன்று போட்டி நடக்கும் இடத்தை வந்தடைய உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டர்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் ஆசிய தகுதிச் சுற்று ஆட்டங்கள் மே 9 முதல் 12 வரை நடைபெற்றன.
இந்த தொடரில் இந்தியாவில் இருந்து மொத்தம் 14 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் அமன் ஷெராவத் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதேபோல, பெண்களுக்கான மகளிர் 68 கிலோ எடை பிரிவில் நிஷா தஹியா தனது ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
இந்த தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்ற பிரபல மல்யுத்த வீரர்கள் சுனில் குமார், தீபக் புனியா ஆகியோர் தகுதி பெற தவறினர்.
அதேபோல, சுஜித் கால்கல் (65 கிலோ) மற்றும் ஜெய்தீப் அஹ்லவத் (74 கிலோ) வெண்கல பதக்கத்திற்கான ஆட்டம் வரை முன்னேறி, தோல்வியை சந்தித்தனர்.
அதேபோல, கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகரில் கடந்த ஏப்ரல் 19 முதல் 21 வரை ஒலிம்பிக் ஆசிய தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 17 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அந்த தொடரில், பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத், மகளிர் 57 கிலோ எடை பிரிவில் அன்ஷு மாலிக், மகளிர் 76 கிலோ எடை பிரிவில் ரித்திகா ஹூடா ஆகியோர் தங்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டை பெற்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 53 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற ஆன்டிம் பங்கலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இதன்மூலம், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 6 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 7 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், ரவி தஹியா (வெள்ளி), பஜ்ரங் புனியா (வெண்கலம்) என 2 பேர் பதக்கம் வென்றனர்.
அதற்கு முந்தைய 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், மல்யுத்த விளையாட்டில் 7 பேர் பங்கேற்ற நிலையில், சாக்ஷி மாலிக் மட்டும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பில் 5 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், சுஷில் குமார் (வெள்ளி) மற்றும் யோகேஸ்வர் தத் (வெண்கலம்) ஆகியோர் பதக்கங்களை வென்றிருந்தனர்.
இந்நிலையில், மல்யுத்த விளையாட்டில் இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: பர்கர் பிரியரா நீங்கள்? இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
பியூட்டி டிப்ஸ்: கோடையில் பரவும் சொறி சிரங்கு… தடுப்பது எப்படி
டாப் 10 செய்திகள் : மோடி வேட்புமனு தாக்கல் முதல் பிளஸ் 1 ரிசல்ட் வரை!