பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இதில் 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் வரும் ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான விளையாட்டுகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இந்தியஅணியில் 17 வீரர், 11 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா மீண்டும் களமிறங்குகிறார்.
ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோரும் தடகள அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய தடகள அணி விவரம்
ஆடவர் பிரிவு: அவினாஷ் சேபிள் (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் ஜெனா (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), பிரவீன் சித்ரவேல், அபுல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப்), அக் ஷ் தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் பிஷ்ட் (20 கி.மீ. நடைப்பயிற்சி), முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), மிஜோ சாக்கோ குரியன் (4X400 மீட்டர்தொடர் ஓட்டம்), சூரஜ் பன்வார் (நடை பந்தய கலப்பு மராத்தான்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்).
மகளிர் பிரிவு: கிரண் பஹால் (400 மீ), பருல் சவுத்ரி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் மற்றும் 5,000 மீ), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டம்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அபா கதுவா (குண்டு எறிதல்), ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யாராம்ராஜ், பூவம்மா எம்ஆர் (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), பிராச்சி (4X400 மீட்டர் தொடர் ஓட்டம்), பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ. நடை பந்தயம் / நடைபந்தய கலப்பு மராத்தான்).
5 தமிழக வீரர்கள்!
பிரவீன் சித்திரவேல் மும்முறை தாண்டுதல் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த இந்திய தடகள வீரர். அவர் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதல் பிரிவில் பங்கேற்று 16.89 மீ (55.4 அடி) தாண்டி உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில், தற்போது இந்திய அணி சார்பாக பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ் ரமேஷ் மற்றும் சந்தோஷ் தமிழரசன் இருவரும் ஆடவர்களுக்கான 4*400 மீ தொடர் ஓட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சுபா வெங்கடேசன் மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் மகளிர் பிரிவில் 4*400 மீ தொடர் ஓட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய தடகள சங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : டிவிஏசி விசாரணையால் தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்!
பாம்பன் கோவில் குடமுழுக்கு: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!