பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றுள்ளது. இதன் மூலம் அரிய சாதனையை படைத்துள்ளார் மனு பாக்கர்.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நேற்று துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி 580 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்தது.
இதனையடுத்து வெண்கல பதக்கத்திற்கான 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய ஜோடி, தென் கொரியாவின் லீ வான்ஹோ ஒ யே-ஜின் ஜோடியை இன்று எதிர்கொண்டது.
அதில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தினை தட்டிச்சென்றுள்ளது.
இதன்மூலம் ஒலிம்பிக்கில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத அரிய சாதனையை இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் செய்துள்ளார்.
அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு ஒலிம்பிக்கில் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் (ஜூலை 28) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவு போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தங்க மகளாக உருவெடுத்துள்ள அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வயநாடு நிலச்சரிவு… தேசிய பேரிடராக அறிவிக்க கேரள எம்.பிக்கள் கோரிக்கை!
சென்னை தொழில் வரி 35 சதவீதம் உயர்வு!