பிரான்ஸில் நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2வது நாளான இன்று (ஜூலை 28) பதக்கங்களை குறி வைத்து இந்திய வீரர்கள் பல்வேறு போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
அதன் முழு விவரம் :
துப்பாக்கிச் சுடுதல்!
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்த மனு பாக்கர், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலரிவன் மற்றும் ரமிதா ஆகியோர் மதியம் 12.45 மணிக்கு தொடங்கும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்குகிறார்கள்.
அர்ஜுன் பாபுதா மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் மதியம் 2.45 மணிக்கு நடைபெறும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் பதக்கத்தை குறி வைத்து விளையாட உள்ளனர்.
பேட்மிண்டன்
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து இன்று தனது முதல் சுற்றில் மாலத்தீவு வீராங்கனை பாத்திமா ரசாக்கை எதிர்த்து விளையாட உள்ளார். இந்த போட்டியானது மதியம் 12:50க்கு நடைபெறுகிறது.
அதே போன்று HS பிரணாய் இரவு 8 மணிக்கு ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனியின் ரோத்தை எதிர்த்து தனது ஒலிம்பிக் பயணத்தை தொடங்குகிறார்.
குத்துச்சண்டை
இந்தியாவின் மிகப்பெரிய பதக்க வாய்ப்புகளில் ஒருவராக கருதப்படும் நிகத் ஜரீன், இந்திய நேரப்படி இன்று மாலை 3:50 மணிக்கு பெண்களுக்கான 50 கிலோ குத்துச்சண்டை போட்டியில் ஜெர்மனியின் குளோட்சருடன் சண்டையிடுகிறார்.
டேபிள் டென்னிஸ்
ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஸ்லோவியாவின் கோசுலை எதிர்த்து சரத் கமல் மாலை 3 மணிக்கு விளையாடுகிறார். இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஹர்மீத் தேசாய் விளையாடுகிறார்.
மதியம் 2.15 மணிக்கு நடைபெறும் பெண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் ஸ்வீடனை சேர்ந்த கால்பெர்க்குடன் மோதுகிறார் ஸ்ரீஜா அகுலா.
அதே பிரிவில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரிட்டனை சேர்ந்த ஹர்சியுடன் மோத உள்ளார் மனிகா பத்ரா.
வில்வித்தை
தீபிகா, அங்கிதா மற்றும் பஜன் ஆகிய இந்திய பெண்கள் வில்வித்தை அணி இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விளையாடுவார்கள். அதில் தகுதி பெறும் பட்சத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
நீச்சல்
மதியம் 2.30 மணிக்கு ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று போட்டியில் ஸ்ரீஹரி நடராஜும், பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதிச் சுற்று போட்டியில் தினிதி தேசிங்கும் விளையாட உள்ளனர்.
துடுப்பு படகு
மதியம் 1.06 மணிக்கு நடைபெறும் ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் ரிபிசாஜ் எனப்படும் காலிறுதிக்கான கடைசி தகுதிச்சுற்றில் பால்ராஜ் பன்வார் பங்கேற்கிறார்.
டென்னிஸ்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்ஸின் கோரண்டினை எதிர்த்து மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் விளையாடுகிறார்.
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரோஹன் போபண்ணா மற்றும் என் ஸ்ரீராம் பாலாஜி ஜோடியானது, பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் – எட்வர்ட் ரோஜர்-வாசெலின் ஜோடியை மாலை 3.30 மணி எதிர்கொள்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளை எதில் பார்ப்பது?
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் அனைத்து Sports 18, MTV மற்றும் Colors networks சேனலில் ஒளிப்பரப்பாகிறது.
ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்திலும் பாரிஸ் ஒலிம்பிக்கின் நேரடி ஒளிபரப்பை காணமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paris Olympics 2024: சாதித்த மனு பாக்கர்… பதக்கங்களை நோக்கி இந்திய அணி!
9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் : ஜனாதிபதி உத்தரவு!