ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள் 3பி போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை 28 வயதான ஸ்வப்னில் குசலே படைத்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் Châteauroux இல் உள்ள தேசிய துப்பாக்கி சுடுதல் மையத்தில் ஆடவர் 50m ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது.
இதில் சீனாவின் ஒய்.கே. லியு முன்னிலை வகித்த நிலையில், இந்தியாவின் ஸ்வப்னில் குசலே மற்றும் உக்ரைனின் குலிஷ் இருவரிடையே கடும் போட்டி நிலவியது.
எனினும் கடுமையான போட்டிக்கு மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மயிரிழையில் வெள்ளியை தவறிவிட்ட ஸ்வப்னில், 451.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதன்மூலம் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் என்ற சாதனையை ஸ்வப்னில் குசலே படைத்துள்ளார்.
போட்டியின் முடிவில் சீனாவின் ஒய்.கே. லியு 463.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், உக்ரைனின் எஸ். குலிஷ் 461.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
முன்னதாக 10 மீட்டர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்ற மனுபாக்கர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை படைத்தார்.
தொடர்ந்து 10 மீட்டர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கலம் வென்று பாக்கர் மீண்டும் சரித்திரம் படைத்தார். இதன் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
இன்று ஸ்வப்னில் குசலே மற்றொரு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியா பாரீஸ் ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களுடன் 41வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!
ரசிகர்கள் எதிர்பார்த்த ’ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் தேதி இதுதான்!