2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸின் இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிக் மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கரஸ் மோதிக்கொண்டனர்.
இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ எட்பெனை 6-0, 6-1 என வீழ்த்திய ஜோகோவிக், 2வது சுற்றில் டென்னிஸ் ஜாம்பவான்களில் ஒருவரான ரஃபேல் நடாலுக்கு எதிராக 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.
தொடர்ந்து 3வது சுற்றில் ஜெர்மனியின் டொமினிக் கோபரை 7-5, 6-3 என வீழ்த்தினார், ஜோகோவிக். காலிறுதியில் 8ஆம் நிலை வீரரான ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை 6-3 , 7-6 (7-3) என வீழ்த்திய ஜோகோவிக், அரையிறுதியில் இத்தாலியின் லொரன்ஸோ முசேட்டியை 6-4, 6-2 என எளிதாக வென்றார்.
இதை தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில், நோவக் ஜோகோவிக் மற்றும் கார்லோஸ் அல்கரஸ் மோதிக்கொண்டனர். இந்த ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற 2024 விம்பிள்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஜோகோவிக்கை அல்கரஸ் 6–2, 6–2, 7–6(7–4) என வீழ்த்தியிருந்த நிலையில், அதற்கு நம்பர் 1 வீரான ஜோகோவிக் பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே 2 பேரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். ஆனால், தான் ஏன் நம்பர் 1 வீரர் என்பதை நிரூபித்த ஜோகோவிக், 7-6 (7-3), 7-6 (7-2) என நேர் செட் கணக்கில் அல்கரஸை வீழ்த்தி, தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
NOVAK DJOKOVIC – THE OLYMPIC GOLD MEDALIST AT THE AGE OF 37.????
– The greatest ever of Tennis! ????#Tennis #GOLD #NovakDjoković pic.twitter.com/RgoPscAnjg
— Paris 2024 Olympics Commentary (@Paris2024Club) August 4, 2024
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் முதன்முதலாக விளையாடிய ஜோகோவிக், அந்த தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அதை தொடர்ந்து, லண்டனில் நடைபெற்ற 2012 ஒலிம்பிக்கில், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், அர்ஜென்டினாவின் ஜான் மார்ட்டின் டெல் பொட்ரோவிடம் தோல்வியடைந்து, பதக்கத்தை தவறவிட்டார். 2016 ரியோ ஒலிம்பிக்கில், இதே ஜான் மார்ட்டின் ஜோகோவிக்கை முதல் சுற்றிலேயே வெளியேற்றினார்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் போட்டியிட்ட ஜோகோவிக், பாப்லோ கரீனோ பஸ்டாவிடம் தோல்வியடைந்து, மீண்டும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அல்கரஸை வீழ்த்தி, தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், 2வது ஒலிம்பிக் பதக்கத்தையும் நோவக் ஜோகோவிக் கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம், டென்னிஸ் ஜாம்பவான்கள் ஆண்ட்ரே அகஸி, ரஃபேல் நடால் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில், ‘கேரியர் கோல்டன் ஸ்லாம்’ பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த ஜாம்பவான்கள் மட்டுமே அனைத்து விதமான கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்த நிலையில், தற்போது அவர்களுடன் வரலாற்றுப் பட்டியலில் நோவக் ஜோகோவிக்கும் இணைந்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரை சூப்
தாத்தா ரீ என்ட்ரி: அப்டேட் குமாரு
கலைஞர் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம்: ஸ்டாலின் கடிதம்!
Olympic 2024: த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்ற இந்தியா!