2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பெற்ற லக்சயா சென், தனது அரையிறுதி ஆட்டத்தில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டென்மார்க்கை சேர்ந்த விக்டர் எக்ஸல்சன்னை எதிர்கொண்டார்.
அந்த போட்டியில், துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி லக்சயா சென் முன்னிலை பெற்றிருந்தபோதும், வலுவாக கம்-பேக் கொடுத்த விக்டர் எக்ஸல்சன், லக்சயா சென்னை 22-20, 21-14 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதை தொடர்ந்து, தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை இழந்த லக்சயா சென், வெண்கலப் பதக்கத்திற்காக உலகின் 8ஆம் நிலை வீரரான மலேஷியாவின் லீ ஸி ஜியாவை எதிர்கொண்டார்.
நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற இந்த போட்டியில், அரையிறுதியைப் போல இப்போட்டியிலும் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென், முதல் செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து, இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் உறுதி என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,
அடுத்தடுத்த செட்களில் லக்சயா சென்னுக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்த லீ ஸி ஜியா, 2வது மற்றும் 3வது செட்களை 21-16, 21-11 என கைப்பற்றினார்.
இதன்மூலம், 21-13, 16-21, 11-21 என தோல்வியடைந்த லக்சயா சென், வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
லீ ஸி ஜியா வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இறுதிப் போட்டியில் 21-11, 21-11 என மிக எளிதாக வெற்றி பெற்ற விக்டர் எக்ஸல்சன், தனது தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக்கொண்டார்.
அவரிடம் தோல்வியை சந்தித்த தாய்லாந்தை சேர்ந்த குன்லவுட் விடிட்சர்ன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், கடந்த 3 ஒலிம்பிக் தொடர்களில் பேட்மின்டனில் பதக்கம் வென்ற இந்தியா, இம்முறை பதக்கம் எதுவும் இன்றி வெளியேறியது.
2012 ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார், பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பறியிருந்தார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இது என்னடா பிரேக்கிங் நியூஸுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு
ஒலிம்பிக்ஸ் 2024:டேபிள் டென்னிஸ் காலிறுதிக்குள் நுழைந்த இந்தியா!!!