Paris Olympics 2024: நாளுக்கு நாள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் சுவாரஸ்யம் அடைந்துவரும் நிலையில், 6வது நாளில் ஸ்வப்னில் குசலே இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை வென்று கொடுத்தார்.
ஆடவர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடுதல் பிரிவில், ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.
இருப்பினும், இந்த நாள் இந்திய அணிக்கு ஒரு மோசமான நாளாகவே அமைந்துள்ளது.
பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங் ஜியாவை எதிர்கொண்ட இந்தியாவின் பி.வி.சிந்து, 19-21, 14-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 2 ஒலிம்பிக் தொடர்களிலும் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்ற பி.வி.சிந்து, இம்முறையும் பதக்கத்தை வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாத்விக் – சிராக் ஜோடி தோல்வி!
முன்னதாக, பாட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை, மலேசியாவின் ஏரோன் சியா – சோ வோ யிக் இணையை எதிர்கொண்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக இவர்கள் தங்கப் பதக்கத்தை கூட வெல்லலாம் என பலரும் எண்ணிய நிலையில், இப்போட்டியில் இந்த ஜோடி 21-13, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
ஆக்கி, குத்துச்சண்டையிலும் தோல்வி!
அதேபோல, குத்துச்சண்டை மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிகத் ஜரீன், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான வூ யூவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆடவர் ஹாக்கி பிரிவில், பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில், இந்தியா துவக்கத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தாலும், 3வது குவார்டரில் அதிரடியாக 2 கோல் அடித்த பெல்ஜியம் அணி, இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.
மகளிர் 50 மீ ரைபிள் 3 பொசிஷன் துப்பாக்கி சுடுதல் பிரிவில், இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிப்ட் கவுர் சம்ரா, இந்த பிரிவில் தகுதிச்சுற்று ஆட்டத்திலேயே வெளியேறினார்.
ஸ்வப்னில் குசலேவின் வெண்கலப் பதக்கத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், சக வீரர் என்.எஸ்.பிரனாயை 21-12, 21-6 என வீழ்த்திய லக்சயா சென், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம் முதல் இந்தியா-இலங்கை மோதல் வரை!
கிச்சன் கீர்த்தனா : ஃப்ரெஷ் கோகனட் பிஸ்தா க்ரீம் வித் ஹோல் ஸ்ட்ராபெர்ரி