Paris Olympics 2024: துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்த மனு பாக்கர், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெரும் சாதனையையும் மனு பாக்கர் படைத்துள்ளார்.
எனினும் மனு பாக்கர் இந்த சாதனையுடன் நிற்கப்போவதில்லை. இந்த ஒலிம்பிக் தொடரில் மேலும் 2 பதக்கங்களை நோக்கி அடுத்தடுத்த தினங்களில் களமிறங்கவுள்ளார்.
துப்பாக்கி சுடுதல்
அவற்றில் முதலாவதாக, இன்று (ஜூலை 29) நடைபெறவுள்ள 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவு தகுதி சுற்று போட்டிகளில், ஷரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனு பாக்கர் பங்கேற்கவுள்ளார்.
அந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 12:45 மணிக்கு துவங்குகிறது. இந்த தகுதிச் சுற்று போட்டியில் ரிதம் சங்வான் – அர்ஜுன் சிங் சீமா என மற்றொரு இந்திய இணையும் பங்கேற்கவுள்ளது.
ஜூலை 28 அன்று நடைபெற்ற துப்பாக்கி சுற்று 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் மற்றும் மகளிர் தகுதி சுற்று ஆட்டங்களில், இந்தியாவின் அர்ஜுன் பபுடா மற்றும் ரமிதா ஜிண்டால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த பிரிவுகளில் இன்று (ஜூலை 29) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், பதக்கங்களை குறிவைத்து அவர்கள் களமிறங்க உள்ளனர்.
மகளிருக்கான போட்டிகள் மதியம் 1 மணிக்கும், ஆடவருக்கான போட்டிகள் மதியம் 3:30 மணிக்கும் துவங்கவுள்ளன.
பகல் 1 மணிக்கு நடைபெற உள்ள துப்பாக்கி சுடுதல் ஆடவர் ட்ராப் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமான் பங்கேற்கவுள்ளார்.
வில்வித்தை
அதேபோல, வில்வித்தை ஆடவர் தரவரிசை சுற்று ஆட்டத்தில் அபாரமாக விளையாடி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி, இன்று தனது காலிறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இந்த போட்டி மாலை 6:30 மணிக்கு துவங்கவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், அரையிறுதியை அடுத்து பதக்கத்திற்கான போட்டிகளும் இன்று (ஜூலை 29) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று 3 பதக்கங்களை எதிர்நோக்கி களமிறங்குகின்றனர்.
ஹாக்கி
ஹாக்கி ஆடவர் பிரிவில், முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என வீழ்த்திய இந்தியா, இன்று 2வது போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி, மாலை 4:15 மணிக்கு துவங்குகிறது.
பேட்மிண்டன்
ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் லீக் சுற்றில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கியை எதிர்கொள்கிறார் லக்ஷயா சென். இந்த போட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் லீக் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி, ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்பஸ்- மார்வின் சிடெல் ஜோடியை பகல் 12 மணிக்கு எதிர்கொள்கிறது.
மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் லீக் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா – தனிஷா கிராஸ்டா ஜோடி, ஜப்பானின் நமி மேட்சுயமா- சிஹாரு ஷிட்டா ஜோடியை பகல் 12.50 மணிக்கு எதிர்கொள்கிறது.
டேபிள் டென்னிஸ்:
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சிங்கப்பூரின் ஜெங் ஜியானை இரவு 11.30 மணிக்கு எதிர்கொள்கிறார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா தோல்வி.. முதன்முறையாக ஆசிய கோப்பை வென்ற இலங்கை மகளிர் அணி
புதுச்சேரி மருத்துவக் கல்லூரி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தாம்பரத்தைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலைய இடிப்பு பணி தீவிரம்!
ஹெல்த் டிப்ஸ்: உடற்பயிற்சிகள் மூலம் மூளையை வலுப்படுத்தலாம்… எப்படி?