Paris Olympics 2024: இந்தியாவின் பதக்க வேட்டை ஸ்டார்ட்… வெண்கலத்தை தட்டித்தூக்கிய மனுபாக்கர்
பாரீஸ் ஒலிம்பிக் 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் இன்று (ஜூலை 28) வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. நேற்று (ஜூலை 27) நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தகுதிச்சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும் மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 221.7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றினார். தென்கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒய்.ஜே.ஒஹ் 243.2 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தையும், ஒய்.ஜே.கிம் 241.3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனு பாக்கர், “2021 டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வியடைந்தப் பிறகு அதில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்கு மிக நீண்ட நேரம் எடுத்தது. ஆனால், அந்த வலிகளை கடந்து இன்று வெற்றிப் பெற்ற உணர்வை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ள மனு பாக்கருக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, “இது ஒரு வரலாற்றுப் பதக்கம். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்பதால் இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, “துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கிய மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மனு பாக்கரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.
அவரது சாதனை பல விளையாட்டு வீரர்களை, குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும். வரும்காலத்தில் அவர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பாராட்டியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட ப்ரமோஷன்களில் எஸ்கேப்… நடிகர்களுக்கு ஆர்.கே.செல்வமணி செக்!
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உதவி… தங்கம் தென்னரசு உறுதி!