2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஹாக்கி பிரிவில் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டுவந்த இந்தியா, லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்ட இந்தியா, ஷூட்-அவுட் முறையில் த்ரில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6 அன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதின. முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி அணியை 5-4 என வீழ்த்திய இந்தியா வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாகவே இருந்தது.
இந்நிலையில், அந்த எதிர்பார்ப்பை எகிறவைக்கும் வகையில், போட்டியின் 7வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு முதல் கோலை அடித்தார், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங். இதை தொடர்ந்து, முதல் பகுதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
ஆனால், 2வது பகுதியில் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி, 2 கோல்களை அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜெர்மனியின் கோன்சலோ பெய்லெட் முதல் கொலை அடித்தார்.
தொடர்ந்து 27வது நிமிடத்தில், ஜெர்மனிக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை பயன்படுத்தி கிறிஸ்டோபர் ரூயர் 2வது கோலை அடித்தார்.
தொடர்ந்து, 3வது பகுதியின் 36வது நிமிடத்தில், இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக மாற்றிய சுக்ஜீத் சிங், போட்டியை 2-2 என சமன் செய்தார்.
பின், 4வது பகுதியில் மீண்டும் தனது அட்டாக்கிங் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜெர்மனி, தனக்கு கிடைத்த 2 பெனால்டி கார்னர்களை தவறவிட்டபோதும், 54வது நிமிடத்தில் மார்கோ மில்ட்காவ் அபாரமாக ஒரு கோல் அடித்து, ஜெர்மனிக்கு 3-2 என முன்னிலையை பெற்றுத்தந்தார்.
இதை தொடர்ந்து, சுமித், சுக்ஜீத் சிங் உட்பட அனைவரும் கடுமையாக போராடி, இந்தியாவுக்காக 3வது கோலை அடிக்க முயன்றும், அது தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து, ஜெர்மனி அணி 3-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில், அந்த அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
மறுபுறத்தில், இந்திய அணி வெண்கலப் பதக்கத்திற்காக ஸ்பெயின் அணியுடன் மோதவுள்ளது. இந்த 2 போட்டிகளும் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறவுள்ளது. இந்தியா விளையாடவுள்ள வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டம் மாலை 5:30 மணிக்கும், இறுதிப் போட்டி இரவு 10:30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாரிஸ் இதுக்கும் ஃபேமசா? அப்டேட் குமாரு
நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி
5 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்!
கோவை மேயர் தேர்தல்: ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!