கடந்த ஜூலை 26 அன்று, செயின் நதியில் கோலாகல துவக்க விழாவுடன் துவங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 11) நிறைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழா, இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 நள்ளிரவு 12:30 மணிக்கு துவங்கவுள்ளது.
இந்த ஒலிம்பிக் தொடரில், இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் 16 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே ஒலிம்பிக் விளையாட்டு தொடர்களில் பங்கேற்றுவரும் இந்திய அணி, அதிகபட்சமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கப் பதக்கத்துடன் 7 பதக்கங்களை வென்றது. இதன்மூலம், பதக்கப் பட்டியலில் 48வது இடத்தையும் பிடித்தது.
இந்நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கையை கடந்து 10-க்கும் அதிகமான ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வெல்லும் என விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதிமாக 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 63வது இடத்தை பிடித்துள்ளது.
முன்னதாக, மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். அடுத்து, கலப்பு 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். இந்தியாவின் 3வது பதக்கமும் துப்பாக்கி சுடுதல் பிரிவிலேயே வந்த நிலையில், ஆடவர் 50மீ 3 பொசிஷன் பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார்.
இதை தொடர்ந்து, ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
அடுத்ததாக, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில், நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
கடைசியாக, ஆடவர் பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில், அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், 1 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது.
இந்தியா சறுக்கியது எங்கே?
பல போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த வீரர், வீராங்கனைகள், அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்த்த சாத்விக் – சிராக், காலிறுதியில் தோல்வியடைந்தனர். பி.வி.சிந்துவும் அதேபோல தோல்வியடைந்து, ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபுறத்தில், லக்சயா சென் பதக்க மேடைக்கு மிக அருகில் சென்று பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேபோல, கலப்பு குழு வில்வித்தை பிரிவில், தீரஜ் பொம்மதேவரா – அங்கிதா பகத் இணை வெண்கலப் பதக்கதிற்கு அருகில் சென்று தோல்வியை சந்தித்தது.
தடகளப் போட்டிகளில், இந்தியா சார்பில் 27 பங்கேற்ற நிலையில், நீரஜ் சோப்ரா மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், ஆடவர் 3000 மீ ஸ்டீபில்சேஸ் பிரிவில் அவினாஷ் சாப்லே இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஆறுதல் அளித்தார்.
குத்துச்சண்டையில், நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட லவ்லினா போர்கோஹைன் அதிர்ச்சி தோல்வியடைந்தார். நம்பிக்கை அளித்த நிஷாந்த் தேவ் காலிறுதியில் தோல்வியை சந்தித்தார்.
துப்பாக்கி சுடுதலில், இந்தியா சார்பில் 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், அப்பிரிவில் 3 பதக்கங்கள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தது. ஆடவர் 10 மீர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜுன் பபுதா, மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் 4வது இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டனர். ஸ்கீட் கலப்பு குழு பிரிவில், மஹேஸ்வரி சவ்ஹான் – ஆனந்த்ஜீத் சிங், 1 புள்ளியில் வெண்கலப் பதக்கத்தை இழந்தனர்.
அதேபோல, பளு தூக்குதலில் மீராபாய் சானு 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.
டேபிள் டென்னிஸில், இந்தியா பதக்கம் எதுவும் வெல்லவில்லை என்றாலும், மணிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர், இந்தியாவின் நம்பிக்கையாக மாறியுள்ளனர்.
இப்படி பல பிரிவுகளில் இந்தியா மிக நெருக்கமாக சென்று பதக்கங்களை தவறிவிட்டுள்ளது. இம்முறை தவறவிட்ட பதக்கங்களை அடுத்த 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் என நம்புவோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
ஜெயலலிதா குறித்து சர்ச்சைப் பேச்சு… தா.மோ.அன்பரசனுக்கு ஜெயக்குமார் வார்னிங்!
100 வீரர்கள் போனா, அதிகாரிங்க 200 பேரு ஜாலி டூர் போறாய்ங்க. மேலும் அரசியல் சித்து வேலைகள் – என்னத்த வெளங்கும்?