பாரிஸ் விளையாட்டு தொடரில், ஆடவர் ஹாக்கி பிரிவில் ‘குரூப் பி’ குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு முதல் அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது.
‘குரூப் பி’ பிரிவில் தனது கடைசி லீக் போட்டியில், ஒலிம்பிக் தொடரில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்தியா, காலிறுதியில் கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் 2வது பகுதியில், எதிரணியின் வீரரை உள்நோக்கத்தோடு ஹாக்கி பேட்டால் தாக்கியதாக, இந்திய வீரர் அமித் ரோஹிதஸுக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மீதி ஆட்டத்தை 10 வீரர்களை கொண்டே விளையாடிய இந்திய அணி, கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷின் துணிச்சலான ஆட்டத்தால் போட்டியை 1-1 என சமன் செய்தது.
பின் நடந்த ஷூட்-அவுட்டில் 4-2 என வெற்றி பெற்ற இந்தியா, இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி அணியை 5-4 என வீழ்த்திய இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்துள்ளது.
இந்நிலையில், கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வழங்கப்பட்ட ‘ரெட் கார்டு’ காரணமாக, அமித் ரோஹிதாஸ் இந்த அரையிறுதி ஆட்டத்தில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஆகஸ்ட் 4 அன்று வெளியிட்ட அறிக்கையில், “ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற இந்தியா – கிரேட் பிரிட்டன் இடையிலான ஆட்டத்தில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் விதிகளை மீறியதற்காக, அமித் ரோஹிதாஸ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை 35வது போட்டிக்கு (ஜெர்மனிக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள அரையிறுதி ஆட்டம்) பொருந்தும். அந்த அமித் ரோஹிதாஸ் பங்கேற்க மாட்டார். இந்தியா 15 பேர் கொண்ட அணியுடனேயே களமிறங்கும்”, எனக் குறிப்பிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, இந்த உத்தரவை திரும்பப்பெற்று, அமித் ரோஹிதாஸுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடையை நீக்கக்கோரி, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.
ஆனால், அந்த கோரிக்கையை ஆகஸ்ட் 5 அன்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இதனால், அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோஹிதாஸ் விளையாட முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இது என்னடா பிரேக்கிங் நியூஸுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு
ஒலிம்பிக்ஸ் 2024:டேபிள் டென்னிஸ் காலிறுதிக்குள் நுழைந்த இந்தியா!!!
IND vs SL: மிரட்டிய ஜெஃப்ரி வெண்டர்சே… இந்தியா படுதோல்வி!
விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன்!