அது 2020 டோக்கியோ ஒலிம்பிக். கொரோனா காரணமாக 2020-ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர், 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்த ஒலிம்பிக் தொடர் 2021 ஜூலை 23 அன்று துவங்கி 2021 ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது.
2021 ஆகஸ்ட் 4. இந்திய அணி ஏற்கனவே 3 பதக்கங்களை வென்றிருந்தது. மேலும், ஈட்டி எறிதல், மல்யுத்தம், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் பதக்கங்களை எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர்.
அப்போது, தொலைக்காட்சியை ஆன் செய்து, அவர்களுக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத ஒரு விளையாட்டை பார்க்க வைத்தார், அதிதி அசோக். அந்த போட்டிக்கான விதிமுறைகளையும் பரிச்சயம் செய்துகொள்ள வைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில், ஆகஸ்ட் 4 அன்று மகளிருக்கான கோல்ப் விளையாட்டு துவங்கியிருந்தது. மொத்தம் 4 சுற்றுகளாக, 4 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டில், இந்தியா சார்பில் அதிதி அசோக், தீக்சா தாகர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த போட்டியில், முதல் நாளின் முதல் சுற்று முடிவில், 67 புள்ளிகளுடன் சராசரியை விட 4 புள்ளிகள் குறைவாக பெற்று அதிதி அசோக் 2வது இடம் பிடித்திருந்தார்.
இப்போது, இந்த புள்ளிகளின் நடைமுறை உங்களுக்கு புரியவில்லை என்றால், அதிதி அசோக் மூலம் கற்றுக்கொண்ட கோல்ப் விதிகள் உங்களுக்காக…
‘இந்த கோல்ப் விளையாட்டில் ஒவ்வொரு சுற்றிலும் 18 குழிகள் என மொத்தம் 72 குழிகளை வீராங்கனைகள் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் சராசரியாக இவ்வளவு ஷாட்கள் தேவைப்படும் என ஏற்கனவே வகுத்து வைக்கப்பட்டிருக்கும். அந்த சராசரியை விட எவ்வளவு குறைவான ஷாட்களில் குழிகளை பூர்த்தி செய்கிறோமோ, தரவரிசையில் அவ்வளவு முன்னேறி செல்லலாம்.’
அதன்படி, முதல் சுற்றின் முடிவில் 18 குழிகளுக்கான சராசரியை விட 4 குறைவான ஷாட்களில் குழிகளை பூர்த்தி செய்து 67 புள்ளிகளுடன், அதிதி அசோக் 2வது இடத்தில் இருந்தார்.
2வது நாளின் 2வது சுற்றில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த அதிதி அசோக், 133 புள்ளிகளுடன் சராசரியை விட 9 புள்ளிகள் குறைவாக பெற்று, 2வது இடத்திலேயே தொடர்ந்தார்.
3வது நாளிலும் அதிதி அசோக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 201 புள்ளிகளுடன் சராசரியை விட 12 புள்ளிகள் குறைவாக பெற்று 2வது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இதை தொடர்ந்து, 4வது நாளின் 4வது சுற்றில், கடைசி சில குழிகள் சூழ்நிலை அதிதி அசோக்கிற்கு சற்று எதிராக அமைய, 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட அவர், 1 புள்ளி வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட் 7) களமிறங்கவுள்ள அதிதி அசோக், டோக்கியோவில் தவறவிட்டதை இங்கு கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு
பாரிஸ் இதுக்கும் ஃபேமசா? அப்டேட் குமாரு
சினிமாவை விட்டு விலகுகிறேனா? – ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லிஞ்ச் விளக்கம்!
“செந்தில் பாலாஜி 67 கோடி வாங்கியிருக்கிறார்” : ED வாதம்!