பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கண்க்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் அரையிறுதியில் தோற்ற ஹர்மன் பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்த நிலையில், ஒரு கோல் கூட விழவில்லை.
இதனால் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் ஆக்ரோசமாக விளையாடின. அதன்படி, 12வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்க் மிரல்லஸ் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் ஆட்டத்தை இந்திய அணி தீவிரப்படுத்திய நிலையில், அடுத்தடுத்து கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர்களை இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித் சிங் கோலாக மாற்றி அசத்தினார்.
அதன்பின்னர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை தாண்டி ஸ்பெயின் அணியால் அடுத்த கோல் அடிக்க முடியவில்லை.
எனினும் கடைசி 15 நிமிடங்களில் ஸ்பெயின் அணி தனது தாக்குதல் ஆட்டத்தில் ஆக்ரோசம் காட்டியது. பரபரப்பான கடைசி கட்ட நிமிடங்களில் தொடர்ந்து 3 முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்த போதிலும், அதனை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபாரமாக தடுத்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தினார்.
இதனால் இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்து பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. இது ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 4வது வெண்கல பதக்கம் ஆகும்.
முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டு முறை பதக்கம் வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா