பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேல் நாட்டு வீரர்களை பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்ற பாலஸ்தீன அழைப்பை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிராகரித்துள்ளது.
உலகமே நாளை தொடங்க இருக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் 117 வீரர்கள் உட்பட 203 தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளைச் (NOCs) சேர்ந்த சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள் பாரீஸில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு எதிரான போர் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு வர இருக்கும் இஸ்ரேலிய வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்!
இதுதொடர்பாக பேட்டியளித்த பிரான்ஸ் இடதுசாரி எம்பி தாமஸ் போர்ட்டஸ், “பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வர தேவையில்லை’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.
மேலும், ’உக்ரைன் – ரஷ்யா போரை முன்னிட்டு, அந்நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசிய கொடியின் கீழ் போட்டியிடும் உரிமையைப் பறித்ததைப் போலவே இஸ்ரேலிய வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும்’ என்று சில இடதுசாரி பிரெஞ்சு அரசியல்வாதிகள் அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து, ”1972 இல் முனிச் விளையாட்டுப் போட்டியில் பாலஸ்தீனிய பயங்கரவாதிகளால் 11 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்டிய யூத நிறுவனங்களின் பிரதிநிதி கவுன்சிலின் தலைவர் யோனாதன் அர்ஃபி, ”ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலியர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்” என்றும், ”அவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பாலீஸ்தீனம் கடிதம்!
இதற்கிடையே “போர்நிறுத்தத்தை மீறியதுடன், சுமார் 400 பாலஸ்தீனிய விளையாட்டு வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது. பாலஸ்தீன வீரர்களின் பயிற்சி கூடாரம் மற்றும் வசதிகளை தகர்த்தனர். மேலும் இதுவரை காஸாவில் வசித்து வந்த சுமார் 40,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்துள்ளனர். எனவே பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு இஸ்ரேல் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி ஐஓசிக்கு கடிதம் அனுப்பியது.
ஐஓசி மறுப்பு!
அதனை ஆய்வு செய்த ஐஓசி தாமஸ் பாக் செய்தியாளர்களை சந்தித்து, “பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டியாகும். எனவே மற்ற அனைத்து NOC களைப் போலவே ஒலிம்பிக்கில் பாலஸ்தீனத்திற்கும் சம உரிமை உண்டு.
எனினும் இஸ்ரேல் வீரர்கள் விவகாரத்தில் ஐஓசியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எனவே அரசியல் விவகாரத்தை காரணம் காட்டி விளையாட்டில் இருந்து வீரர்களை ஒதுக்கி வைக்க முடியாது” என தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு பிரான்ஸ் பொறுப்பு!
இதனை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் வரவேற்றுள்ளார். அவர், “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிரான்ஸ் வரவேற்கிறது. ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளதால் அவர்கள் தங்களது நாட்டு கொடிகளின் கீழ் விளையாட முடியும். இஸ்ரேல் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது பிரான்சின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டி கோலகலமாக தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அரசியலாகும் தங்கலான் – டிமாண்டி காலனி – 2
கடன் பெறும் விவசாயிகளை உரம் வாங்க நிர்பந்திக்கக் கூடாது! – உயர்நீதிமன்றம்