2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் இந்தியா 5 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்றிருந்தது.
பாரிஸ் பாராலிம்பிக் தொடருக்கு முன்னதாக, ஒரு பாராலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்களாக இதுவே இருந்தது.
ஆனால், செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற 2024 பாராலிம்பிக் தொடர் விளையாட்டுப் போட்டிகளில், ஒரே நாளில் 5 பதக்கங்களை வென்ற இந்தியா, இந்த தொடரில் தனது பதக்க எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தியது.
மேலும், டோக்கியோவில் படைத்த சாதனையை பாரிஸில் முறியடித்தது. இந்நிலையில், தற்போது பாரிஸில் மேலும் ஒரு புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது.
செப்டம்பர் 6 அன்று நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் 9வது நாள் ஆட்டங்களில், ஆடவர் உயரம் தாண்டுதல் T64 பிரிவில், இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமார், பாரிஸில் 2.08 மீ உயரத்தை தாண்டி முதலிடம் பிடித்தார்.
இதன்மூலம், இந்த விளையாட்டு தொடரில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், டோக்கியோவில் அதிகபட்சமாக வென்ற 5 தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை பாரிஸில் கடந்து, இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் F57 பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ஹொகடோ ஹொடோசே சேமா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், இந்த விளையாட்டு தொடரில் தற்போது வரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி , 12 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், பதக்கப் பட்டியலிலும் 17வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய (செப்டம்பர் 7) ஆட்டங்களில், ஆடவர் C1-3 ரோடு ரேஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக ஷைக் அர்ஷத் மற்றும் மகளிர் C1-3 ரோடு இறுதிப்போட்டியில் ஜோதி கடேரியா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
அதேபோல, ஆடவர் ஈட்டி எறிதல் F41 இறுதிப்போட்டியில் நவ்தீப், ஆடவர் 400மீ ஓட்டப்பந்தயம் T47 பிரிவு இறுதிப்போட்டியில் திலீப் கவித், மகளிர் 200மீ ஓட்டப்பந்தயம் T12 பிரிவில் சிம்ரன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
இதன்மூலம், இந்த தொடரில் இந்தியா 30-க்கும் அதிகமான பதக்கங்களை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிவின் பாலி மீதான பாலியல் புகார் : இயக்குநர்கள் சொன்ன தகவல்!
மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி… : குவியும் பக்தர்கள், களைகட்டிய விநாயகர் சதுர்த்தி!
வேலைவாய்ப்பு : சென்னை NIS-ல் பணி!