ஆகஸ்ட் 28 அன்று பாரிஸில் கோலாகலமாக துவங்கிய 2024 பாராலிம்பிக்ஸ் விளையாட்டுத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா பதக்க எண்ணிக்கையில் பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் F41 பிரிவு இறுதிப்போட்டி நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் நவ்தீப் சிங் பங்குபெற்றார்.
தனது 3வது வாய்ப்பில் 47.32 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த நவ்தீப் சிங், புதிய பாராலிம்பிக் சாதனையை படைத்தார். மேலும், இதன்மூலம் போட்டியிலும் முதலிடத்திற்கு முன்னேறினார்.
ஆனால், ஈரானை சேர்ந்த சடேஜ் பெய்ட் சயா தனது 5வது வாய்ப்பில் 47.65 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, நவ்தீப் சிங் படைத்த பாராலிம்பிக் சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறினார்.
6 வாய்ப்புகளுக்கு பிறகு, சடேஜ் பெய்ட் சயா முதலிடத்திலும், நவ்தீப் சிங் 2வது இடத்திலும் இருந்தனர். இதன் காரணமாக, சடேஜ் பெய்ட் சயாவுக்கு தங்கப் பதக்கமும், நவ்தீப் சிங்கிற்கு வெள்ளிப் பதக்கமும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், போட்டியில் திடீர் திருப்பமாக, நடத்தை விதிகளை மீறியதாக, சர்வதேச பாராலிம்பிக் அமைப்பின் விதி 8.1-ஐ சுட்டிக் காட்டி, சடேஜ் பெய்ட் சயா ஆட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக, 2வது இடத்தில் இருந்த நவ்தீப் சிங் முதல் இடத்திற்கு முன்னேறியதை தொடர்ந்து, அவருக்கு தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.
அதேபோல, மற்றோரு ஆட்டத்தில், மகளிர் 200மீ ஓட்டப்பந்தயம் T12 இறுதிப்போட்டியில், இந்தியாவின் சிம்ரன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை, இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள கடைசி நாள் ஆட்டத்தில், பாரா படகோட்டுதல் மகளிர் கயாக் ஒற்றையர் 200 மீ பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் பூஜா ஓஜா பங்கேற்கிறார். அவர் இந்தியாவின் 30வது பதக்கத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
பட்டு வேட்டி சட்டையில் ஸ்டாலின்… சிகாகோ தமிழர்கள் உற்சாக வரவேற்பு!
Duleep Trophy: ஸ்ரேயஸ் அய்யர் அணியை வீழ்த்திய ருதுராஜின் ‘இந்தியா சி’