Paris Paralympics 2024: 2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, தற்போது வரை 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 27வது இடத்தில் உள்ளது.
இன்று (செப்டம்பர் 2) நடைபெறவுள்ள பாரா பேட்மிண்டன் போட்டிகளில் மட்டும் இந்திய அணி 7 பதக்கங்களை குறிவைத்து களமிறங்கவுள்ளது. அதில், ஏற்கனவே 3 பதக்கங்கள் இந்தியாவுக்கு உறுதியாகிவிட்டது.
ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில், இந்தியாவின் நிதேஷ் குமார் கிரேட் பிரிட்டனின் டேனியல் பெத்தேலுக்கு எதிராக தங்கப் பதக்கத்திற்காக போட்டியிடவுள்ளார்.
அதேபோல, மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில், தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவை சேர்ந்த யாங் கியூஷியாவுடன் தங்கப் பதக்கத்திற்காக மோதவுள்ளார்.
இவர்களை தொடர்ந்து, ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில், 2020 டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாத்திராஜ், இம்முறை தங்கப் பதக்கத்திற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகஸ் மசூரை எதிர்கொள்கிறார்.
கலப்பு இரட்டையர் SH6 பிரிவில், வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த சோலைமலை – சுமதி சிவன் இணை களமிறங்குகிறது. இவர்கள் இந்தோனேஷியாவின் ஷுபன் – மர்லினா ரீனா இணையை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல, மகளிர் ஒற்றையர் SH6 பிரிவிலும், வெண்கலப் பதக்கத்திற்காக சுமதி சிவன் களம் காண்கிறார். இப்போட்டியில், இந்தோனேஷியாவின் மர்லினா ரீனாவை சுமதி சிவன் எதிர்கொள்கிறார்.
மற்றோரு மகளிர் ஒற்றையர் SU5 பிரிவு வெண்கலப் பதக்கப் போட்டியில், மற்றோரு தமிழக வீராங்கனையான மனிஷா ராமதாஸ் களமிறங்குகிறார்.
இதுமட்டுமின்றி, ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில், வெண்கலப் பதக்கத்திற்காக சுகந்த் கடம் போட்டியிடவுள்ளார்.
இவை மட்டுமின்றி, டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டில் ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவு இறுதிப்போட்டியில் இன்று களமிறங்குகிறார்.
அவருடன் சந்திப் சஞ்சய் சர்கார் மற்றும் சந்தீப் என மேலும் 2 இந்திய வீரர்கள் களம் காண்கின்றனர்.
அதேபோல, டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கத்துணியாவும் வட்டு எறிதல் F56 பிரிவு இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்.
மேலும், மகளிர் வட்டு எறிதல் F53 பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் கஞ்சன் லகானி விளையாடவுள்ளார்.
இதன் காரணமாக, இன்றைய நாள் இந்தியாவுக்கு பதக்கங்கள் நிறைந்த நாளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஃபார்முலா கார் பந்தயம் வெற்றி : அமெரிக்காவில் இருந்து பாராட்டிய ஸ்டாலின்
வேலைவாய்ப்பு : சென்னை துறைமுகத்தில் பணி!
ஊட்டியில் வீடு வாங்க விஷம் வைத்து பெண்ணைக் கொன்ற கணவர் குடும்பம்!
வால்பாறை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது!