2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரின் 6வது நாள் முடிவில் 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என இந்தியா 20 பதக்கங்களை வென்றிருந்தது. முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு தொடரிலேயே அதிகபட்சமாக 19 பதக்கங்களை வென்றிருந்தது. இதன்மூலம், அந்த எண்ணிக்கையை கடந்து இந்தியா புதிய வரலாறு படைத்தது.
செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற 7வது நாள் ஆட்டங்களில், இந்தியா மேலும் 2 தங்கம், 2 வெள்ளி என 4 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
பாரா வில்வித்தை ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவில், இந்தியாவின் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம், பாராலிம்பிக் வரலாற்றில் பாரா வில்வித்தையில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்விந்தர் சிங் பெற்றார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் கிளப் த்ரோ F51 பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீரர் தரம்பீர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதே பிரிவில், மற்றோரு இந்திய வீரரான பிரணவ் சூர்மா வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
முன்னதாக நடைபெற்ற ஆடவர் குண்டு எறிதல் F46 பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற சச்சின் சர்ஜிராவ் கிலாரி, அந்த போட்டியில் 16.32மீ தூரத்திற்கு குண்டை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் தற்போது வரை 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி, பதக்கப் பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த விளையாட்டுத் தொடர் செப்டம்பர் 8 அன்று நிறைவடைய உள்ள நிலையில், தற்போது இந்தியா டாப் 10 இடங்களுக்குள் நுழையுமா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை பெற்றிருந்த இந்தியா, பதக்கப் பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் நாட்டில் எங்கிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்!