சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுக்கிறது. இதனால், ஹைப்ரிட் மாடலில் போட்டியை நடத்த ஐசிசி ஆலோசித்து வருகிறது. இந்திய அணி ஆடும் ஆட்டங்களை துபாய் போன்ற பொது இடங்களில் நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நாளை (நவம்பர் 29) நடைபெறவுள்ளது. கூட்டத்தின் முடிவில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் என சொல்கிறார்கள்.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி கூறுகையில், ‘நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ அதை மட்டுமே செய்வேன். ஐசிசி தலைவருடன் நானும் எங்களது குழுவும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பாகிஸ்தானுக்கு வந்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், இனி ஒருபோதும் இந்தியாவுக்கு வந்து நாங்கள் விளையாட மாட்டோம்.
அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாகும். இந்திய அணி தங்களுடைய கோரிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக எங்களிடம் சொல்ல வேண்டும். இதை கூட அவர்கள் செய்யவில்லை. டிசம்பர் மாதத்தில் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்கிறார். அவர் பதவிக்கு வந்த பிறகு இந்திய அரசிடம் முறையாக பேசுவார் என்று கருதுகிறேன். கிரிக்கெட்டின் நன்மையை கருத்தில் கொண்டு ஜெய் ஷா இந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2025 மகளிர் உலகக் கோப்பை, 2026 டி20 உலக கோப்பை என இரு பெரிய தொடர்கள் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி வரவில்லை என்றால் அது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார் : உதயநிதி பங்கேற்பு!
’நான் நயன்தாராவுடன் துணை நிற்பேன்!’ – நடிகை பார்வதி