2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. மறுபுறத்தில், விளையாடிய 7 போட்டிகளில் 6ல் தோல்வியடைந்த வங்கதேசம், முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், பாகிஸ்தான் vs நியூசிலாந்து, ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து என 2 முக்கிய ஆட்டங்கள் நேற்று (நவம்பர் 4) நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவுகள் தொடரில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
நியூசிலாந்து தொடர்ந்து 4வது தோல்வி..
பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பந்துவீச வந்த பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
ராச்சின் ரவீந்திரா 105 ரன்கள், கேன் வில்லியம்சன் 95 ரன்கள், கிளென் பிலிப்ஸ் 41 ரன்கள் என வந்தவர்கள் எல்லாம் அதிரடியாக ரன் குவிக்க, நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 401 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சஃபீக் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ஃபகர் ஜமான்(126*) மற்றும் பாபர் அசாம்(66*) ரன் மழை பொழிந்தனர். இவர்களின் அதிரடியால் பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதை தொடர்ந்து டக்வர்த் லூயிஸ் முறைப்படி, பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. சிக்ஸ் மழை பொழிந்து 81 பந்துகளில் 126 ரன்கள் விளாசிய ஃபகர் ஜமான் ‘ஆட்ட நாயகன்’ விருது வென்றார்.
முதல் 4 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, அடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அணி வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு, அரையிறுதியில் இடம் உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா..
மற்றொரு போட்டியில், வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய இங்கிலாந்து, டாஸ் வென்று முதலில் பந்துவீச வந்தது.
ஆஸ்திரேலியா அணிக்காக பொறுப்பாக விளையாடிய மார்னஸ் லபுசானே 71 ரன்கள், கேமரூன் கிரீன் 47 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்கள், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 35 ரன்கள் சேர்க்க, அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் எடுத்திருந்தது.
287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு, சிறப்பாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் 64 ரன்கள், தாவித் மலான் 50 ரன்கள், மெயின் அலி 42 ரன்கள், கிறிஸ் வோக்ஸ் 32 ரன்கள் சேர்ந்திருந்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால், இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது.
இந்த போட்டியில் 19 பந்துகளில் 29 ரன்கள் விளாசி, பந்துவீச்சில் 10 ஓவர்களில் வெறும் 21 ரன்களே வழங்கி 3 விக்கெட்களை கைற்றிய ஆடம் ஜாம்பா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தொலைக்காட்சி ஊடகங்கள் சொல்ல விரும்பாத சில உண்மைகள்: ஜெர்மன் நாஜிசமும் இஸ்ரேலிய பாசிசமும்!