இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று (அக்டோபர் 23) மோதி வருகின்றன.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பாபர் அசாம் டக் அவுட்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரில் ரிஸ்வான் தடுமாறிய நிலையில், இரண்டாவது ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் வேகத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வானும் 4 ரன்களில் அர்ஸ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் 5 ஒவரில் 24 ரன்களுக்கு முக்கிய 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தத்தளித்து.
போராடிய மசூத் இப்திகார் ஜோடி!
இதற்கிடையே மசூத் மற்றும் இப்திகார் ஆகியோர் களமிறங்கி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் பொறுப்பாக ஆடிய நிலையில் பாகிஸ்தான் ரன்ரேட் மெல்ல உயர்ந்தது.
மசுத் நிதானமாக ஆடிய நிலையில், இப்திகார் அதிரடியாக ஆடினார். இந்த ஜோடி 50 ரன்கள் குவித்த நிலையில் பாகிஸ்தான் அணி 11 ஓவர்களில் 70 ரன் குவித்தது.

இதனை தொடர்ந்து இப்திகார் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
எனினும் இந்த ஜோடியை இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளர் முகமது ஷமி அதிரடியாக ஆடி வந்த இப்திகாரை (51) கிளீன் போல்டாக்கி பிரித்தார்.
ஹர்திக் பாண்டியா அபாரம்!
பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. 14 ஓவரை வீச வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அந்த ஓவரில் ஷதாப் கான்(5) மற்றும் ஹைதர் அலி( 2) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

16 ஓவரில் ஹர்திக்கின் பந்து முகமது நவாஸின் பேட்டில் பட்டு வெளியேற விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் கையில் தஞ்சமடைந்தது.
அதற்கடுத்த ஓவரில் மீண்டும் வந்த அர்ஸ்தீப் சிங் வீசிய பவுன்சரில் ஆசிப் அலி(2) விக்கெட்டை பறிகொடுத்தார்.
மசூத் அரைசதம்!
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் உறுதியாக நின்று ஆடிய மசூத் அரைசதம் கடந்தார்.
அவருக்கு துணையாக கடைசி கட்டத்தில் இறங்கிய ஷாகின் அப்ரிடியும் சிறிது கிச்சு கிச்சு மூட்ட பாகிஸ்தான் அணி 150 ரன்களை கடந்தது.
கடைசி ஓவர் வீசிய புவனேஷ்வர், அப்ரிடியை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் மற்றும் ஷார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் தற்போது 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
T20WorldCup2022 : முதல் பந்திலேயே பாபருக்கு பாடம் கற்பித்த அர்ஸ்தீப் சிங்!
மழைநீர் கால்வாயில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை!