ODI World Cup 2023: வெற்றியுடன் பயணத்தை துவங்கிய பாகிஸ்தான்

Published On:

| By christopher

நெதர்லாந்து அணியை  வீழ்த்திய பாகிஸ்தான் அணி, வெற்றியுடன் தனது உலகக்கோப்பை பயணத்தை துவங்கியுள்ளது.

2023 ஒருநாள் உலகக்கோப்பையின் 2வது போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இன்று (அக்டோபர் 6) மோதிக்கொண்டன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி துவக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்களை பறிகொடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஃபகார் ஜமான் 12 ரன்களுக்கும், இமாம்-உல்-ஹக் 15 ரன்களுக்கும், அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 10 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை பறிகொடுத்து திணறியது.

ஆனால், அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் – சவுத் ஷகீல், அணிக்கு தேவையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, விக்கெட் வீழ்ச்சியில் இருந்து பாகிஸ்தானை மீட்டனர். இந்த இணை, 4வது விக்கெட்டிற்கு 120 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில், முகமது ரிஸ்வான் – சவுத் ஷகீல் என 2 பேருமே 68 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது நவாஸ் மற்றும் சதாப் கான் தங்கள் பங்குக்கு முறையே 39 ரன்கள் மற்றும் 32 ரன்கள் சேர்த்தனர்.

ஆனால், மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நெதர்லாந்து அணிக்காக பாஸ் டி லீட் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு, விக்ரம்ஜித் சிங் நல்ல துவக்கம் அளித்தாலும், மேக்ஸ் ஓ’டவுட், காலின் அக்கர்மேன் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அதன்பின், 4வது விக்கெட்டிற்கு, பந்துவீச்சில் அசத்திய பாஸ் டி லீட் மற்றும் விக்ரம்ஜித் சிங் ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்தனர். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. விக்ரம்ஜித் சிங் 52 ரன்களுக்கும், பாஸ் டி லீட் 67 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இவர்கள் விக்கெட் வீழ்ச்சிக்கு பிறகு, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நெதர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஃபெவிலியன் திரும்பினார். இறுதியில், நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்காக ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணிக்காக, 9 பவுண்டரி, 1 சிக்ஸுடன் 52 பந்துகளில் 68 ரன்கள் குவித்த சவுத் ஷகீல், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Asian Games 2023: 100 பதக்கங்களை நெருங்கிய ‘இந்தியா’!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக மாஜிகளின் தலையெழுத்தை மாற்றும் ஆளுநரின் கையெழுத்து!