ஜெய் ஷா கருத்துக்கு பதிலடியாக இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் அணி செல்லக்கூடாது என்று அந்நாட்டு முன்னாள் வீரர் சயீத் அன்வர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது டி20 உலகக்கோப்பை போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி போட்டிகள் குறித்த விவாதங்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சூடுபிடித்துள்ளன.
2023ம் ஆண்டு ஐசிசி சார்பில் பல பெரிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்த உள்ளது. அதேபோன்று 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது!
இந்நிலையில் 91வது பிசிசிஐ வருடாந்திர கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ செயலாளரும், ஏசிசி தலைவருமான ஜெய் ஷா, ”அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது.
2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானுக்கு பதிலாக நடுநிலையான வேறொரு இடத்தில் நடைபெறும்.” என்று தெரிவித்தார்.
ஜெய் ஷாவின் கருத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஷாவின் கருத்தால் கோபமடைந்த பாகிஸ்தான் முன்னாள் வீரரான சயீத் அன்வர் தனது கடும் எதிர்ப்பை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.
பிசிசிஐக்கு என்ன பிரச்சனை?
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து சர்வதேச அணிகளும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்காக பாகிஸ்தானுக்கு வரும்போது, பிசிசிஐக்கு என்ன பிரச்சனை?
ஆசியக்கோப்பை போட்டிக்காக பிசிசிஐ நடுநிலையான இடத்திற்கு செல்ல விரும்பினால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கும் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து நடுநிலையான இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வரும் 23ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இரு நாட்டு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகள் குறித்து இரு கிரிக்கெட் வாரியங்கள் மோதி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெ.மரணம் – 8 பேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு!
நீங்க எந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துறீங்க ? ராகுல் சொன்ன நச் பதில்!